பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/642

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

626

சங்க இலக்கியத்

மரக்காடுகள், கடலோரத்தில் உள்ள உப்பங்கழியில் உள்ளன. இதனால், இது நெய்தல் நில மரம். இம்மரம் கழிமுள்ளியுடன் சேர்ந்து கானலிடத்தே வளரும் இயல்பிற்று. இவ்வுண்மையை அங்ஙனமே கலித்தொகை கூறும்.

“மாமலர் முண்டகம் தில்லையோடு ஒருங்குடன்
 கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்”

-கலி. 133 : 1 - 2


மேலும் தாழைப் புதர்களுடனும், தில்லை மரம் உப்பங்கழியில் வளரும். இவ்வுண்மையைத் திணை மாலை நூற்றைம்பது கூறுகின்றது.

“கண்டல் அம்தில்லை கலந்து கழிசூழ்ந்த
 மிண்டல் அம்தண் தாழை இணைந்து”
[1]

இத்தில்லைப் பொதும்பரில் வதியும் நீர்நாய்க் குருளை கழியிலுள்ள கொழுத்த மீனைச் சுவைத்துப் பள்ளிகொண்டதென்பர்.

“. . . . . . . . . . . . இருங்கழிக்
 குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தி
 தில்லை அம்பொதும்பில் பள்ளி கொள்ளும்”

-நற். 195 : 1-3


‘தில்லை’ மரத்தளிர், மங்கிய செம்மை நிறங்கொண்டது. மாற்பித்தியார் என்பவர் இதனை மானின் செம்பட்டைச் சடை நிறத்திற்கு உவமித்தார்.

“தில்லை யன்ன புல்லென் சடையொடு ”
-புறநா. 252 : 2


இத்தகைய தில்லை மரங்கள் சிற்றுாரின் வேலியாக அமைந்துள்ளதென்றும் புலவர் கூறுவர்.

“தில்லைவேலி இவ்வூர்”-ஐங். 131 : 2

இம்மரத்தில் பால் வடியும். இப்பால் மிகவுங் கொடியது. இதனை யுன்னி இம்மரத்தை ஆங்கிலத்தில், ‘புலியின் பால் மரம்’ (Tiger’s milk tree) என்பர். இக்குடும்பத்தில் 57 பேரினங்கள் தமிழ் நாட்டில் உள்ளன என்றும். இப்பேரினத்தில் 3 சிற்றினங்கள் வளர்கின்றன என்றும், ‘காம்பிள்’ கூறுவர். இதில் ஆண்பால்


  1. திணைமா. நூ. 61