பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/646

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

630

சங்க இலக்கியத்

அதியமான் நெடுமான் அஞ்சி, என்ற அதியர் கோமான் ஒரு பேரரசன். அவன் பெறுதற்கரிய சுவை மிக்க நெல்லிக் கனி ஒன்று கிடைக்கப் பெற்றான். இக்கனியின் சிறப்பு யாதெனில், இதனை உண்பவர் சாதலைத் தவிர்ப்பர். இக்கனியை ஔவையார் என்னும் பெரும் புலவருக்குக் கொடுத்தான். எனினும், இக்கனியின் சிறப்பியல்பினை அவரிடம் கூறவில்லை. ஔவைப் பிராட்டியும் அதனைப் பெற்றுக் கொண்டார். அவர் பாடுகின்றார்:

‘அதியர் கோமான் அஞ்சி! பெறுதற்கரியதென்று கருதாமல், அதனால் பெறும் பெரும் பேற்றினை எமக்குக் கூறாது, சாதல் ஒழிய, எமக்கு நெல்லிக் கனி அளித்தாய். ஆதலின் நீலமணிமிடற்று ஒருவன் போல, நீயும் சாவாதிருத்தல் வேண்டும்’ என்று கூறி வாழ்த்துகின்றாள்.

“நீலமணி மிடற்று ஒருவன் போல
 மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
 பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
 சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
 தாதல் நின்னகத் தடக்கிச்
 சாதல் நீங்க எமக்கீத் தனையே”
-புறநா. 91 : 6-11

இவ்வுண்மை நிகழ்ச்சியை நத்தத்தனாரும் குறிப்பிடுகின்றார்.

“. . . . . . . . . . . . மால்வரைக்
 கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
 அமிழ்து விளைதீங்கனி ஔவைக் கீந்த
 உரவுச் சினங்கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
 அரவக் கடல் தானை அதிகனும்”
-சிறுபா. 99-103

நெல்லி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே
யூனிசெக்சுவேலீஸ் (unisexuales)
தாவரக் குடும்பம் : யூபோர்பியேசி (Euphorbiaceae)
தாவரப் பேரினப் பெயர் : எம்பிளிகா (Emblica)