பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதவம்–அத்தி
பைகஸ் குளோமெரேட்டா (Ficus glomerata,Roxb.)

அதவம்–அத்தி இலக்கியம்

சங்க இலக்கியத்தில் ‘அதவம்’ என்றும், ‘அத்தி’ என்றும் கூறப்படும் இச்சிறு மரம் பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியா. ‘அத்தி பூத்தாற் போல’ என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று. இருப்பினும் பிற்கால இலக்கியங்கள் கூறும் ‘பூவாதே காய்க்கும் மரங்களும் உளவே’[1] என்றதற்கு எடுத்துக்காட்டு ‘அத்தி, ஆல்’ முதலிய மரங்கள் ஆகும் என்பர். உணவாகக் கொள்ளப்படும் அத்திக் காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப் பூக்கள் நிறைந்திருக்கும். இப்பூக்களைத் தன்னகத்தே கொண்டிருத்தலின் அத்திப் பிஞ்சு - கோளி - எனப்படும். தாவரவியலில் இதனை ரிசப்டகிள் (Receptacle) என்று கூறுவர். அத்திக் காயினுள்ளே மூன்று அல்லது நான்கு வகையான பூக்கள் உள்ளன அவை ஆண் பூ. பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப் பூக்களில் ஆண் மலட்டுப் பூவும். பெண் மலட்டுப் பூவும் பைகஸ் காரிக்கா (Ficus carica)என்ற சிற்றினத்தில் காணப்படும்.

அத்தியில் ஆண் மரமும் பெண் மரமும் தனித் தனியாக வளரும். இவற்றில் முறையே ஆண் பூக்களைக் கொண்ட ‘கோளி’யும், பெண் பூக்களைக் கொண்ட ‘கோளி’யும் உண்டாகும். அத்திக் காய்கள் இலைக் கோணத்தில் இரண்டு இரண்டாகக் காணப்படும். முட்டை வடிவான இதன் பிஞ்சுதான் அத்திப் பூந்துணர். இதன் மேற்புறத்தில் சிறு துளை செதில்களால் மூடப் பெற்றிருக்கும். இதற்குள்ளே காயின் சதைப்பற்றான உட்புறச் சுவரில் பலவகையான மலர்கள் நிறைந்திருக்கும். ஆண் மலரில் உண்டாகும் மகரந்தம், பெண் மலரில் உள்ள சூல் முடியில் வண்டினத்தால் கொண்டு சேர்க்கப் பெறும். மகரந்தச் சேர்க்கை பெற்ற பெண் மரத்திலுள்ள ‘கோளிகள்’ காயாகிப் பின்னர் பழமாகும். பழம் செந்திறமானது. இதன் செம்மை நிறம் மந்தி முகத்தின் செம்மைக்கு உவமையாகக் கூறப்பட்டது.


  1. நல்வழி