பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

634

சங்க இலக்கியத்

“அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
 துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க”
-நற். 95 : 3-4

அத்திமரம் ஆற்றங்கரைகளில் வளரும் என்றும், இதன் கிளைகள் வெண்ணிறமானவை என்றும், இதன் கனி மிக மென்மையானது என்றும், நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும் கூறும் குறுந்தொகை.

“ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்து
 எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”
-குறு. 24 : 3-4

அதவம்—அத்தி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அர்ட்டிசிபுளோரே (urticiflorae) என்னும் இத்தொகுதியில் மானோகிளமைடியே என்றதொரு பிரிவு உண்டு. அதில் அத்திக் குடும்பம் சேர்க்கப்பட்டுள்ளது.
தாவரக் குடும்பம் : மோரேசி (Moraceae)
தாவரப் பேரினப் பெயர் : பைகஸ் (Ficus)
தாவரச் சிற்றினப் பெயர் : குளோமெரேட்டா (glomerata)
சங்க இலக்கியப் பெயர் : அத்தி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : அதவம்
உலக வழக்குப் பெயர் : அத்தி
தாவர இயல்பு : சிறு மரம். இதில் ஆண்மரமும், பெண்மரமும் உண்டு. இதன் பேரினத்தில் ஏறத்தாழ 700 சிற்றினங்கள் உலகில் உள்ளன என்பர். தமிழ் நாட்டில் 27 சிற்றினங்கள் உள்ளன என்பர் காம்பிள். இவற்றுள் பெருமரங்களும் கொடியும் உள்ளன.