பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/652

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

636

சங்க இலக்கியத்

அத்தியில் பைகஸ் காரிகா (Ficus carica) என்ற ஒரு சிற்றினம் உண்டு. அத்திப்பழம் (உணவுப்பொருள்) இதிலிருந்து உண்டாவது. இதில் மகரந்தச் சேர்க்கை வியத்தகு முறையில் நிகழ்கின்றது. இதனைச் சற்று விரிவாக விளக்குவாம்.

உண்ணுதற்குரிய பழந்தரும் இந்த அத்தி மரம், ‘மெடிட்டரேனியன்’ கடல் ஓரமாக வளர்கிறது. அத்திக்காய் என்பது ஆல், அரசு இவற்றின் காய்களைப் போன்று ஒரு பூங்கொத்து ஆகும். இதனைத் தமிழ் இலக்கியம் ‘கோளி’ என்று கூறும். இந்த அத்தியில் ஆண் பூக்களும், பெண் பூக்களும் தனித்தனியாக ஒரே காயில் உண்டாகின்றன. ஆண் அத்தி மரத்தில் உண்டாகும் காயினுள் மலட்டுப் பெண் பூக்களும் (Gall flo’ers), ஆண் பூக்களும் இருக்கும். பெண் அத்தி மரத்தில் உண்டாகும் காயினுள் பெண் பூக்களும், மலட்டு ஆண் பூக்களும் இருக்கும். மலட்டுப் பெண் பூவில் சூல் தண்டு குட்டையானது. இப்பூ சூல் உறாது சூலுற்றுச் செயல்படும் பெண் பூவில் சூல்தண்டு நீளமானது. மலட்டு ஆண் பூக்களில் மகரந்தம் விளையாது. மலட்டுப் பெண் பூ ஒரு வகைக் குளவிகள் முட்டையிடுவதற்கு இடம் கொடுக்கவே பயன்படுகிறது. இப்பூவில்தான் பிளாஸ்டோபாகா (Blastophaga sp.) என்னும் குளவி நன்கு அமர்ந்து முட்டையிட முடியும். மற்றைய பெண் பூவில் சூல்தண்டு நீளமாக இருப்பதால், அதன் மேல் இக்குளவி அமர முடியாது. இருப்பினும், இதனுடைய நீளமான சூல்தண்டின் முடிவில்தான் (சூலக முடி) நுண்ணிய மயிரிழைகள் அடர்ந்திருக்கின்றன. இவை மகரந்தங்களைப் பற்றிக் கொள்கின்றன. அங்குச் சுரக்கும் இனிய நீர்க் கசிவின் துணையால் மகரந்தங்கள் முளைத்து, நுண்ணிய மகரந்தக் குழாய்களைத் தோற்றுவித்து, அவற்றின் வழியாகத் தாதுவின் உட்கருவைச் செலுத்தும். மகரந்தக் குழாய் நீண்டு சூல்தண்டின் மூலம் உட்புகுந்து சூலகத்தைச் சென்றடையும். அங்குத் தாதுவின் உட்கரு, சூலகத்திலுள்ள குலக உட்கருவுடன் கலந்து, கரு முதிர்ந்து காயாகிப் பின் பழமாகும். பழத்தில் முதிரும் கரு விதையாகும். இக்கனியில் விதைகள் மிகுதியாக உண்டாகும். இங்ஙனம் அத்திப் பிஞ்சாகிய பூங்கொத்து ‘கோளி’ காயாகிப் பழமாகின்றது.

நீண்ட சூல்தண்டையுடைய இப்பூக்களுக்கு மகரந்தம் எவ்வாறு வந்து சேருகிறது என்பதை இனிக் காண்போம். இவ்வகை அத்தியின் மகரந்தச் சேர்க்கை (pollination) ஒரு வகையான குளவியால் உண்டாகின்றது என்று மேலே கூறினோம். அத்திப் பிஞ்சு காயாவதற்கு இக்குளவி வருகை தருதல் வேண்டும்.