பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சங்க இலக்கியத்

(வெள்ளை அல்லி) நிம்பேயா பூபசென்ஸ் எனவும், செந்நிறமான அரக்காம்பலை (Nymphaea rubra) நிம்பேயா ரூப்ரா எனவும், நீல அல்லியை (Nymphaea ampla) நிம்பேயா ஆம்பிளா எனவும் குறிப்பிடுவர். இவையனைத்தும் (Nymphaeaceae) நிம்பயேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை.

மற்று, ஒரு சிலர் நிறத்தை மட்டுங் கொண்டு நீல அல்லியை கருங்குவளை என்றோ நெய்தலென்றோ நீலமென்றோ கருதுவதற்கு இடமுண்டு. ஆனால், இவைகளின் இலை வடிவம் வேறுபடுதலின் அங்ஙனம் கொள்ளுதல் கூடாது. செங்குவளையின் இலை அல்லியின் இலையைப் பெரிதும் ஒத்திருக்கும். அல்லியிலை வட்ட வடிவானது. செங்குவளையின் இலை ஏறக்குறைய முட்டை வடிவானது. கருங்குவளையின் இலை முக்கோணமாக நீள்முட்டை வடிவம் அல்லது அகன்ற வேல்முனை வடிவானது; செங்குவளை, அல்லி இவற்றின் இலைகளைப் போலவே அடியில் பிளவுபட்டிருக்கும்; சற்றுச் சிறியதாக இருக்கும் இலைக்காம்பு இவற்றின் இலையின் அடி ஒட்டியது; இலைகளும் பூக்களும் நீண்ட காம்புகளை உடையன. இலைகள் நீரில் மிதக்கும். இம்மூன்று இனமான நீர்க்கொடிகளையும் இவற்றின் இலை வடிவைக் கொண்டுதான் வேறுபடுத்த முடியும்.

நெய்தல் இலையை வடித்தெடுத்த வேல் இலைக்கு உவமித்துப் பாடுகின்றார் அகநானூற்றுப் புலவர் குடவாயிற் கீரத்தனார். இப்பாட்டு இல்லையெனின் நெய்தலின் தாவரவியற் பெயரைக் கண்டு சொல்ல முடியாது போகும்.

“நெய்தல் உருவின்ஐது இலங்கு அகல்இலை
 தொடையமை பீலி பொலிந்த கடிகை
 மடைஅமை திண் சுரை மாக்காழ்வேலொடு”

-அகநா. 119: 11-13

இதனுள் கூறிய நெய்தல் இலையின் வடிவம் தாவரவியல் நூல் விவரிக்கும் இதன் வடிவத்துடன் ஒத்துள்ளமை மகிழ்தற்குரியது. மலர் நீலநிறமாகவும், மையுண்ட கண் போன்றுமிருக்கும். நறுமணம் உடையது.

“நீல்நிற நெய்தல் நிறையிதழ் பொருந்த”-நற். 382:2
“சிறுகரு நெய்தல் கண்போல் மாமலர்”-அகநா. 230:2
“நீல்நறு நெய்தலின் பொலிந்த உண்கண்”-புற. 244