பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/665

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

649

 மீன்குடை நாற்றம் தாங்கல் செல்லாது
 துய்த்தலை மந்தி தும்மும் நாட
 நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே
 நுண்கொடிப் பீரத்து ஊழ்உறு பூஎனப்
 பசலை ஊரும் அன்னோ”
-நற்றி. 326 : 1-7

இதனுள்ளே வரும் உள்ளுறை: பலாமரம் தினைப்புனமாகவும், கொக்கு தலைவனாகவும், மீன் தலைவியாகவும், குடைதல் இன்பம் துய்த்தலாகவும், நாற்றம் அலராகவும், மந்தி அன்னையாகவும் கொண்டு, பலா மரத்தின் மேலிருந்து கொக்கு மீனைத் தின்னுதலால் உண்டாகிய நாற்றத்தைத் தாங்க மாட்டாது, மந்தி தும்முதல் போல, புனத்து நீ வந்து இவளைக் கலந்து செல்லுதலால் உண்டாகிய அலரைத் தாங்க மாட்டாது, அன்னை சினந்து பலகாலும் நோக்கி நிற்கும் என்று உள்ளுறை உவமங் கொள்ளலாம்.

மேலும், பலாச் சுளைகளைத் தேனில் தொட்டு, ஆண் குரங்கு பெண் குரங்கின் வாயில் ஊட்டி வளர்க்கும் நாடன் என்று கூறும் ஒரு சிறந்த பாடலைத் திருக்கோவையில் காணலாம்.[1]

பலா தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளைமைடியே
மலரில் புல்லி வட்டமும், அல்லி வட்டமும் இணைந்து, பீரியாந்த் (perianth) என்ற பூவுறையிருக்கும். ஏகிளமைடோஸ்போரியே தொகுதியில் அடங்கும்.
 

  1. “அந்தியின் வாய்எழில் அம்பலத்
    தெம்பிரான் அம்பொன் வெற்பில்
    பந்தியின் வாய்ப்பல வின்களை
    பைந்தே னொடும் கடுவன்
    மந்தியின் வாய்க்கொடுத்து ஓம்பும்
    சிலம்ப மனங் கனிய
    முத்திஇன் வாய்மொழி நீயேமொழி
    மொழிசென்று அம்மொய் குழற்கே”
    திருக்கோவையார் : 92