பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/677

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



661

இலைகள் தம் மேல் தடவிக் கொடுக்கும் படியாகப் பலா மரத்தின் நீழலில் எருமை பாயல் கொண்டிருப்பதைச் சிறுபாணாற்றுப் படையில் நத்தத்தனார் கூறுகின்றார்.

“. . . . . . . . . . . .எருமை
 பைங்கறி நிவந்த பலவின் நீழல்
 மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர”
-சிறுபா. 42-44

முதிராத புதிய மஞ்சள் கிழங்கில் செதில்களும், வேர்களும் மூடியிருக்கும். இதனை இறால் மீனின் புறத்திற்கு உவமை கூறுகின்றார் வெள்ளியந்தின்னனார்.

“முற்றா மஞ்சள் பசும்புறம் கடுப்பச்
 சுற்றிய பிணர சூழ்கழி இறவின்”
-நற். 101 : 1-2

சேம்பு, மஞ்சள் விளைந்த கொல்லையில் பன்றி முதலிய விலங்குகள் புகாவண்ணம் காவலர் எழுப்பும் பறை ஒலி, குன்றில் எதிரொலிக்கும் என்றார் பெருங்கௌசிகனார்.

“சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
 பன்றிப் பறையும். குன்றகச் சிலம்பும்”

-மலைபடு. 343-344


வெறியாட்டு நிகழ்த்தும் குறமகள், குருதியொடு கூடிய வெள்ளரிசியைப் பலியாக இட்டு, மஞ்சளோடே சந்தனம் முதலியவற்றைத் தெளித்து வழிபடுவாள் என்று கூறும் திருமுருகாற்றுப்படை.

“சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து” -திருமுரு. 235

மஞ்சள் ஒரு மங்கலப் பொருள். இதன் கிழங்காகிய மஞ்சளுக்காக, மஞ்சள் செடி தொன்று தொட்டுப் பயிரிடப்பட்டு வருகின்றது. இது உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும். இது மருந்தாகவும் பயன்படும். உடம்பில் பசு மஞ்சளை அரைத்துப் பூசிக் கொள்வதால், நுண்ணிய நச்சுக் கிருமிகள் ஒழியும். மகளிர் இதனைப் பூசிக் கொள்வர்.