பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/681

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



665

என்று அந்த அடியினை அப்படியே கூறுவார் போன்று பாடுவாராயினர். ஆதலின், தென்னையும், வாழையும் ஒரு நாட்டின் செழுமையைக் குறிக்கும் மரங்கள் என்பது பெற்றாம். வாழைப் பழம் தமிழ் நாட்டின் தலை சிறந்த முக்கனிகளுள் ஒன்றாகும்.

வாழை மரம் தோட்டங்களில் வளர்க்கப்படுவதன்றி, மலைப்புறத்தில் தானாகவே வளரும் இயல்பிற்று என்பதைப் புலவர்கள் கூறுவர்.

“வாழையஞ் சிலம்பில் வம்புபடக் குவைஇ” -நற். 176 : 7
“படுநீர்ச் சிலம்பில் கலித்த வாழை” -நற். 188 : 1
“வாழை ஓங்கிய வழைஅமை சிலம்பில்” -நற். 222 : 7
“வாழை மென்தோடு” -நற். 400 : 1

வாழை மரம் வீட்டின் பக்கலிலும் வளர்க்கப்பட்டது போலும். உரலில் அவல் இடிக்கும் மகளிர், அவலிடித்த பின்னர், உலக்கையை வாழை மரத்தின் மேல் சேர்த்தி விட்டு, வள்ளைப் பூவைக் கொய்தனர் என்று பதிற்றுப்பத்து கூறும்.

“அவல்எறி உலக்கை வாழைச் சேர்த்தி
 வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்”
-பதிற்.29 : 1-2

சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு எரித்த அடுப்பில் அட்ட சோற்றை, வாழையினது அகன்ற இலையில் பலருடன் பகுத்துண்ணும் செந்தமிழ் நாட்டின் பண்பினைப் புலப்படுத்துவர் கந்தப்பிள்ளை சாத்தனார்.

“சாந்த விறகின் உவித்த புன்கம்
 கூதளங் கவினிய குளவி முன்றில்
 செழுங்கோள் வாழை அகலிலைப் பகுக்கும்”
-புறநா. 168 : 11-13

வாழை மரம் ஒரு தடவைதான் பூக்கும். வாழைக் குலையில் கருஞ்செம்மையான மடல்கள் இருக்கும். மடல்களுக்குள் வாழை மலர்கள் சீப்புச் சீப்பாக அமைந்திருக்கும். வாழைக் குலையை வாழைத்தார் என்றழைப்பர். தாரின் நுனிப்பகுதியில் ஆண் பூக்களும், அடிப்பகுதியில் பெண் பூக்களும் உண்டாகும். மடல்