பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



iii

 ஒரு மரத்திற்கு–எடுத்துக்காட்டாக ‘அசோகு’ மரத்திற்குப் ‘பிண்டி’ ‘செயலை’ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவையனைத்தும் சராக்கா இன்டிகா (Saraca indica, Linn.) என்ற தாவரப் பெயரின் அடிப்படையில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது. எனினும் ‘பிண்டி’ ‘செயலை’ என்ற பெயர்களும் சங்க இலக்கியத்தில் பிற பெயர்கள் என்று கூறப்பட்டுள்ளன. இத்தாவரங்களின் பெயர்களை அகர வரிசைப்படுத்தி அவற்றின் தாவரப் பெயர்களைச் சேர்த்து, ஒரு பட்டியல் பக்க எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அன்றியும், இந்த 150 மரம், செடி, கொடிகள் அனைத்துலகத் தாவரப் பாகுபாட்டியல் முறைகளில் ஒன்றான பெந்தம்–ஹூக்கரின் பரிணாம முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் இரு வித்திலைத் தாவரங்கள் 48 தாவரக் குடும்பங்களிலும், அகவிதழில்லாத இரு வித்திலைத் தாவரங்கள் 7 குடும்பங்களிலும், ஒருவித்திலைத் தாவரங்கள் 9 குடும்பங்களிலும் அடங்கும். ஆதலின், இத்தாவரக் குடும்பங்களையும், இத்தாவரங்களின் பேரினப் பெயர்களையும் குறிப்பிடும் இவர் தம் பாகுபாட்டு இயல் நெறிப் பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது. இங்ஙனம் பரிணாம முறையில் பாகுபடுத்துங்கால் முதற்கண் ‘பாங்கர்’ எனப்படும் ‘ஓமை’ மரம் இடம் பெறுகின்றது. இத்தாவரங்களில் பெரும்பாலானவை, தாவரவியல் வலலுநர்களால் தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்டு, உலர் படிவங்களாக மத்திய அரசின் தாவர மதிப்பீட்டுக் கோவை மையத்திலும், ‘ஹெர்பேரியம் காலேஜியைப் பிரிசிடென்டியே மெட்ராசென்சிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள சென்னை மாநிலக் கல்லூரியிலும் முறைப்படி சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் நிழற் படங்களை எடுத்து வந்து, இத்தாவர விளக்கங்களுக்கிடையே அவை அமைக்கப் பெற்று உள்ளன.

இந்த ஆய்வுப் பணியை மேற்கொள்ளுமாறு பணித்த தமிழ்ப் பல்கலைக் கழக முதல் துணை வேந்தர் முதுமுனைவர் வ. அய். கப்பிரமணியம் அவர்கட்கும், இவ்வாய்வு நிகழும் போதெல்லாம் ஆக்கமும், ஊக்கமும் உவந்தருளிய இப்பல்கலைக்கழகப் பெரும் பேராசிரியர்கள் அனைவருக்கும், இடையிடையே ஐயம் எழுந்த போது இலக்கிய விளக்கம் நல்கிய முதுபெரும் புலவர் கோவை. இளஞ்சேரனார் அவர்கட்கும், ஒரு சில தாவரங்களின் உலர் படிவங்களைப் படமெடுத்துக் கொள்வதற்கு அனுமதி தந்ததல்லாமல், அதற்கு உறுதுணை செய்த கோவை தாவர மதிப்பீட்டு மையத்தாருக்கும், சென்னை மாநிலக் கல்லூரியின் தாவரவியல்