பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/706

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

690

சங்க இலக்கியத்

“தண் நறுங்கோடல் துடுப்பு எடுப்ப”[1]

எனக் கீழ்க்கணக்கு நூல்கள் கூறுமாற்றால் அறியலாம்.

கோடல் முளைத்து எழும் போது, அது அறுகம் புல்லின் கிழங்கு போன்று இருக்குமெனவும், பின்னர் பசிய இலை விட்டு வளரும் எனவும் கூறுவர்.

“. . . . . . . . கோடற் பைம்பயிர்
 பதவின் பாவை முனைஇ”
-அகநா. 23 : 6-7

செங்காந்தளைப் போலவே கோடல் செடியும் துடுப்பீன்று மலரும் இயல்புடையது.

“தண்கமழ் கோடல் துடுப்புஈன”[2]
“தண்ணறுங் கோடல் துடுப்பு எடுப்ப”[3]

எனக் கோடலின் முகை, துடுப்பை ஒத்திருக்குமென வலியுறுத்தும். இனி, கோடல் முகை அவிழ்தலைக் காண்போம்.

“கோடல் குவிமுகை அங்கை அவிழ” -முல்லை. 95

என்றவிடத்துக் கோடலினது குவிந்த முகை அகங்கை போல விரிய என்று நச்சினார்க்கினியர் உரை கூறினார். கோடலைப் போல அகம்கை வெளிர் மஞ்சள் நிறமும், ஐந்து விரல்களைப் போன்ற (ஆறு) இதழ்களும் உடையதாதலின், உவமை நலம் சிறந்து விளங்கும். துடுப்புப் போன்ற முகை அவிழ்ந்து, போது ஆகும். அது சினமுற்ற பாம்பின் பை விரித்துப் படமெடுத்தாற் போலக் காட்சி தரும். இதனை,

“வெஞ்சின அரவின் பை அணந்தன்ன
 தண்கமழ்க் கோடல் தனது பிணிஅவிழ”
-அகநா. 154 : 6-7
“கோடல்அம்கார் முகைகோன் அராநேர் கருதா”[4]
“அணர்த்துஎழு பாம்பின் தலைபோல் புணர்கோடல்”[5]
“கோடல், முகையோடு அலமர” நெடுநல். பாடல்: 1

என்றவாறு கூறுப. இனி.


  1. ஐந். எ . 17
  2. திணை. ஐ. 21
  3. ஐந். எ. 17
  4. திணை. ஐ. 29
  5. கார். நா. 11