பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/718

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

702

சங்க இலக்கியத்

தென்னைக்கு வழங்கிய பெயரென்பதும், தாழை என்ற பெயரும் தென்னைக்கு உண்டு என்பதும் அறியப்படும்.

சங்க நூல்களில் தாழை என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்குத் தெங்கு என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. எனினும், உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப்படையில் தென்னையைப் பற்றிய சில குறிப்புகளைக் கூறுவர்.

கமுகு புடை சூழத் தெங்கு வளருமென்றும், வளங்கெழு பாக்கத்தில் நெடுந்தூரத்திடை வழியில் பல தெங்குமரங்கள் உள்ளன என்றும், தெங்கின் அடிமரம் யானையின் உடம்பை ஒத்து சருச்சரையை உடையதென்றும் , வளவிய இலையினை உடையது என்றும், தெங்கின் பழுத்த ஓலை (பழுப்பு) முடைந்து கூரை வேயப்படுமென்றும், தேங்காய் மூன்று புடைப்பினை உடையதென்றும், வழிப்போவார் தெங்கின் காயைப் பசி தீர உண்பர் என்றும், பாக்கத்தில் தெங்கின் அடியில் சோறு ஆக்கும் பானை நழுவும்படி தேங்காய் முற்றித் தானே விழுமென்றும் கூறுவர்.

“குன்றுறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
 வண்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த”
-பெரும்பா. 352-353

“. . . . . . . . . . . .மாத்தாட் கமுகின்
 புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
 ஆறுசெல் வம்பலர் காய்பசி தீர
 சோறு அடுகுழிசி இளக விழூஉம்”
-பெரும்பா. 363-366

காற்றில் தெங்கின் ஓலைகள் அசையும் போது ஒலிக்குமெனவும், தென்னையில் விளையும் பழம் பெரியதெனவும் கூறுவர்.

“ஒலிதெங்கின் இமிழ்மருதின்” -பதிற். 13 : 7
“தெங்குபடு வியன் பழம் முனையின்” -புறநா. 61 : 9