பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/729

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



713

என்பவாதலின், தாழையின் அடி மரத்தில் விழுது உண்டென்பது தாழையின் மலர் குருகிறகினை ஒத்து, மடலவிழுமென்பதும் வலியுறும்.

இங்ஙனங் கூறியவற்றால், கைதை என்பது தாழை என்பதும், தாழை என்பது தென்னையைக் குறிக்குமென்பதும் பெற்றாம்.

இவையன்றி, நற்றிணைப் பாடல்களில் காணப்படும் ‘கண்டல்’ என்னும் சொல் தாழையைக் குறிக்கும் என்பர் ஒரு சிலர். கண்டல் என்பது தாழையுடன் உப்பங்கழியில் வளரும் வேறு ஒரு மரம்.

பிற்கால இலக்கியங்கள் தாழைக்குப் பல வேறு பெயர்களைக் கூறுகின்றன.

தாழையின் அடிப்பகுதி பருத்தது. செதில் செதிலான சருச்சரை கொண்டது. அதனால், இராலின் முதுகினை ஒத்தது. இதன் இலை முட்களை உடையது. அதன் அமைப்பு சுறா மீனின் ‘கோடு’ போன்று இரு புறமும் கூரிய வாள் விளிம்புகளை உடையது. இதன் அரும்பு வெண்மையானது. கூரிய முனை உடையது. இத்தோற்றம் யானையின் மருப்புப் போன்றது. மலர் மடல்களை உடையது. மலர் சற்றுத் தலை சாய்ந்து நிற்பது, அழகிய மான் தலை சாய்த்துப் பார்ப்பது போன்றது. மலர்ந்து மணம் பரப்பும். அதனால், விழாக் களம் போல் கமழ்கின்றது என்றெல்லாம் தாழைக்கு விளக்கவுரை தருகின்றார் வெண்கண்ணனார்.

“இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல்
 சுறவுக் கோட்டன்ன முள்ளிலைத் தாழை
 பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்புமுதிர்பு
 நன்மான் உளையின் வேறுபடத் தோன்றி
 விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப”
-நற். 19 : 1-5

மடல் பெரிய தாழம்பூவைத் ‘தடமலர்த் தாழை’ (கலி. 131 : 10) என்று கூறும் கலித்தொகை. பூ நீளமானது. அகன்ற மடல்களை உடையது. தாழம்பூவின் புறத்தோடுகள் தாழையின் இலைகளைப் போன்றவை. இதன் விளிம்புகளிலும், நடுநரம்பின் மேலும் கூரிய, சற்று வளைந்த முட்கள் நிறைந்திருக்கும். இக்கூன் முள்ளைக் கொண்டு வாள் போல்வாய என்றும், அரவு வாள்வாய் என்றும் இவை பேசப்படுகின்றன. மலரின் புற ஓலை-