பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/734

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

718

சங்க இலக்கியத்

போன்ற கால்வாயிடத்து அழைத்துப் போனார். ஆங்கண், சம்பு எனப்படும் இக்‘கண்பு’ நெடிதோங்கிச் செழித்து வளர்ந்து, கதிர் விட்டிருந்தது. அக்கதிர்கள் கம்பங்கதிர்களைப் போன்றிருக்கும். அவற்றில் ஒன்றிரண்டு கதிர்களைக் கொண்டு வரச் சொல்லித் தாம் வாங்கிக் கொண்டார். அக்கதிர்தான் கண்பினது பூந்துணர். அவற்றில், ஒரு கதிரைக் கையில் வைத்துக் கொண்டு, ஏதேதோ அளவளாவிக் கொண்டே, அதனில் உள்ள மலர்களைப் பிசைந்து மூடி வைத்துக் கொண்டார் போலும். மெய்ப்பை அணிந்திருந்த எம்மை, அவற்றைக் கழற்றச் சொல்லித் தாம் கையில் மூடி வைத்திருந்த இணர் மலர் பிசைந்த உருண்டையை எமது மார்பிலே ஓங்கி அடித்தார். மார்பகம் முழுதும் கெட்டிச் சந்தனம் பூசியது போலாயிற்று. உடனே அவர் ‘புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பினை’ என்று கூறி நகையாடினர். அப்போதுதான் கண்பினது காயாகிய கதிர், அதனுடைய பூந்துணர் என்றும், அதில் உள்ள ஆண் பூக்களில் உண்டாகும் மஞ்சள் நிறமான தாதுக்கள் எல்லாம், பெண் மலரின் சூல்முடியில் உண்டாகும் பசைப் பொருளால் இணைந்து பிசையப் பெற்று, அரைத்த சந்தனம் போன்றாகி விட்டது என்றும், அதனை மார்பில் அடித்த போது சந்தனம் அப்பிய மார்பாகி விட்டது என்றும், தனித்திருந்த மஞ்சள் நிறத் தாது மார்பிலெல்லாம் பரவி, பொன்னுரைத்த உரைகல் போன்று மஞ்சள் நிறமாக்கி விட்டதென்றும் அறிந்து மகிழ்ந்தோம். இங்ஙனம் சங்க இலக்கியத்திற்குச் செயல் முறை விளக்கம் தந்து, அறிவூட்டிய அப்பெரும் பேராசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தை வியந்து போற்றுவாம்.

கண்பு—சண்பு—சம்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : நூடிபுளோரே (Nudiflorae)
தாவரக் குடும்பம் : டைபேசி (Typhaceae)
தாவரப் பேரினப் பெயர் : டைபா (Typa)
தாவரச் சிற்றினப் பெயர் : அங்கஸ்டடா (angustata)
சங்க இலக்கியப் பெயர் : கண்பு
உலக வழக்குப் பெயர் : சம்பு
தாவர இயல்பு : நீரிலும்,சதுப்பு நிலத்திலும் வளரும் பல்லாண்டுச் செடி 10 அடி உயரம் வரையில் ஓங்கி வளரும்.