பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/736

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சேம்பு
டைபோனியம் பிளாஜெல்லிபார்மி
(Typhonium flagelliforme,Bl.)

சேம்பு என்பது ஓராண்டுச் செடி. இதன் அடியில் உண்டாகும் சேப்பங் கிழங்கிற்காக இச்செடி தொன்றுதொட்டுப் பயிரிடப்பட்டு வருகின்றது. இக்கிழங்கு சத்துள்ள உணவுப் பொருள்.

சங்க இலக்கியப் பெயர் : சேம்பு
தாவரப் பெயர் : டைபோனியம் பிளாஜெல்லிபார்மி
(Typhonium_flagelliforme,Bl.)

சேம்பு இலக்கியம்

சேம்பின் தண்டு குழல் வடிவானதென்றும், அகன்ற இலையை உடையதென்றும் சேம்பு மலையில் வளருமென்றும், மடல் விரிந்து மலர்கள் வெளிப்படும் என்றும் சேம்பு கழனியில் விளையும் என்றும் சேம்பினது இலையோடே கிழங்கு உணவு கொள்வர் என்றும் சேம்பும் மஞ்சளும் விளைகின்ற நிலத்தே அவற்றைப் பன்றி முதலிய விலங்குகள் அழித்து விடாமல் காவல் புரிவோர் பறை ஒலி எழுப்புவர் என்றும், ‘யானைத் தந்தத்தை உலக்கையாகவும் சேம்பின் இலையைச் சுளகாகவும் கொண்டு மூங்கில் நெல்லை உரலில் அட்டுப் பாடுவோம் வாரீர்’ என்று மகளிர் தோழியரை அழைப்பதாகவும் சங்க நூல்கள் கூறுகின்றன.

“குழற்காற் சேம்பின் கொழுமடல் அகல்இலை” -அகநா. 336 : 1
“விளைவு அறாவியன் கழனி
 . . . . . . . . . . . . . . . .
 முதற் சேம்பின் முளை இஞ்சி”
-பட்டின. 8 : 19