பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/739

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

எருவை
சைபீரஸ் ரோடன்டஸ் (Cyperus rotundus, Linn.)

எருவை ஒரு வகையான கோரைப் புல். நிலத்தில் வளர்வது;: மலர் சிறியது; ‘தோடு’ போன்றது; கார்காலத்தில் மலர்வது; மலைப்புறத்திலும் காணப்படுவது என்ற குறிப்புகளைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.

சங்க இலக்கியப் பெயர் : எருவை
பிற்கால இலக்கியப் பெயர் : பஞ்சாய்க் கோரை
தாவரப் பெயர் : சைபீரஸ் ரோடன்டஸ்
(Cyperus rotundus, Linn.)

எருவை இலக்கியம்

கபிலர், ‘எருவை செருவிளை மணிப்பூங்கருவிளை’ (குறிஞ். 68) என்பர். ‘எருவை’ என்பதற்கு, நச்சினார்க்கினியர் ‘பஞ்சாய்க்கோரை’ என்றும் ‘கொறுக்கச்சியுமாம்’ என்றும் உரை கண்டார். இவற்றுள் பஞ்சாய்க் கோரை என்பது பொருந்தும் போலும். இக்கோரையைக் கொண்டு மகளிர் பாவை செய்து விளையாடுவதும், இதனைக் கொண்டு கோதை புனைவதும் வழக்கம். ஓரம்போகியார் ‘பைஞ்சாய்க் கோதை மகளிர்’ (ஐங். 54:5) என்பாராதலின் இது புலனாம். ‘எருவை’ எனும் இக்கோரை பெருவரைப்புறத்தே வளருமென மூன்று நற்றிணைப் பாடல்கள குறிப்பிடுகின்றன.

“எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி” -நற். 156 : 7