பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/746

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வேரல்–சிறுமூங்கில்
டென்ரோகாலமஸ் ஸ்ட்ரிக்டஸ்
(Dendrocalamus strictus, Nees.)

வேரல்: இது ஓங்கிய மலைப்புறத்தில் அடர்ந்து, கிளைத்துத் தழைத்து வளரும் புதர்ச் செடி. உட்கூடில்லாத வலிய இம்மூங்கில் கழிகள் பல்லாற்றானும் பயன்படுவன.

சங்க இலக்கியப் பெயர் : வேரல்–சிறுமூங்கில்
தாவரப் பெயர் : டென்ரோகாலமஸ் ஸ்ட்ரிக்டஸ்
(Dendrocalamus strictus, Nees.)

வேரல்–சிறுமூங்கில் இலக்கியம்

‘வேரல்’ எனப்படும் சிறு மூங்கிலுக்குக் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் இடங்கொடுத்துள்ளார்.

“விரிமலர் ஆவிரை வேரல் சூரல்” -குறிஞ். 71

கூத்தர் பாணர் முதலியோரை ஆற்றுப்படுத்திய பெருங்கௌசிகனார் அவர்கட்கு அறிவுரை கூறுகின்றார். ‘இழுக்கலுடைய வழியிலே செல்லுங்கால் அங்கு வழி முழுதும் பின்னி வளர்ந்த நுண்ணிய கோல்களை உடைய சிறு மூங்கிலோடே வேழத்தினது மெல்லிய கோல்களையும் பற்றுக்கோடாகப் பிடித்துக் கொண்டு போவீராக’ என்கிறார்.

“முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலொடு
 எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்”

-மலைப. 223-224


‘நுண்கோல் வேரல்’என்று இதனைக் குறிப்பிடுகின்றமையின் வேரல் சிறுமூங்கிலாதலும் பெற்றாம். மேலும் வேரல், வேலியாக அமையுமென்பதைப் புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.