பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/747

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



731

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்” -குறுந் 18 : 1
“வேரல் வேலிச் சிறுகுடி” -நற். 232 : 4
“. . . . . . . . . . . . வேரல்
 பூவுடை அலங்குசினை புலம்ப”
-திருமு. 297-298

என்று ‘சிறுமூங்கிலினது பூவுடைத்தான அசைகின்ற கொம்பு’ என்று நக்கீரரும், இதன் பூவைக் குறிப்பிடுகின்றார். ஆதலின் உந்தூழின் பூவும் வேரலின் பூவும் பயன்பட்டன என அறியலாம். எனவே, வேரல், பெருமூங்கிலைப் போலவே அடர்ந்து, கிளைத்து, மலைப்புறத்தில் செழித்து வளரும் புதர்ச் செடி என்பது போதரும்.

வேரல்—சிறுமூங்கில் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : டென்ரோகாலமஸ் (Dendrocalamus)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்ட்ரிக்டஸ் (strictus)
சங்க இலக்கியப் பெயர் : வேரல்
உலக வழக்குப் பெயர் : மலை மூங்கில், சிறு மூங்கில், கல் மூங்கில்
தாவர இயல்பு : தரைமட்டத் தண்டிலிருந்து கிளைத்து, அடர்ந்து, மலைப்புறத்தில் செழித்து வளரும் புதர்ச் செடி; பல்லாண்டு வரை வளர்ந்து, பெருமூங்கிலைப் போல ஒரு தரம் பூக்கும். 300 முதல் 4,800 அடி வரை உயரமுடைய மலையில் வளரும்.
தண்டு : ‘கல்ம்’ எனப்படும் கோல்கள் 20 முதல் 50 அடி உயரம் வரை ஓங்கி வளரும். உள் துளை இராது. 1 முதல் 3 அங்குலத் தடிப்பு உடையன; கணுக்களில் கிளைகள் வளர்வதில்லை.