பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/752

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

அறுகை–அறுகம்புல்
சைனோடான் டாக்டிலான் (Cynodon dactylon, Pers.)

அறுகை–அறுகம்புல் இலக்கியம்

அறுகம்புல் மழை பெய்தவுடன் நன்கு தழைத்துத் தானே வளருமெனவும், இதனைக் கன்றுகளும், மான் இனம் பிணையொடும் கறித்து உண்ணும் எனவும், பாழ்படுத்தப்பட்ட பகைவர் நாட்டிலே நடந்து வந்த பெரிய திருநாளின்றாகிய அச்சம் முதிர்ந்த மன்றத்திடத்தே நெருஞ்சிப் பூக்களுடன் அறுகம்புல் வளர்ந்துள்ளது எனவும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

“பழங்கன்றுகறித்த பயம்பு அமல் அறுகைத்
 தழங்கு குரல்வானின் தலைப்பெயற்கு ஈன்ற”
-அகநா. 136 : 11-12
“மணிவார்ந் தன்ன மாக்கொடி அறுகை
 பிணங்குஅரில் மென்கொம்பு பிணையொடு மாந்தி
 மான்ஏறு உகளும் கானம் பிற்பட”
-குறுந். 256 : 1-3
“பெருவிழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்து
 சிறுபூ நெருஞ்சியொடு அறுகை பம்பி”
-பட்டின. 255-256

அறுகை–அறுகம்புல் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : சைனோடான் (Cynodon)