பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/764

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

748

சங்க இலக்கியத்

“வேழம் நிரைத்து வெண்கோடு விரைஇ
 தாழை முடித்து தருப்பை வேய்ந்த
 குறியிறைக் குரம்பை பறியுடை முன்றில்”
பெரும்பா. 263-265


வேழம் கரும்பை ஒத்த புதர்ச் செடி. இதுவும் வெள்ளிய துணர் விட்டுப் பூக்கும். மருத நிலத்தின் துறையில் வளர்ந்து, நீராடும் மகளிருக்குத் துணை நிற்கும். பூங்கொத்துக் கவரியைப் போன்றது என்றெல்லாம் புலவர் பாடுவர்.

“புதல்மிசை நுடங்கும் வேழ வெண்பூ” -ஐங். 17 : 1
“கரைசேர் வேழம் கரும்பின் பூக்கும்” -ஐங். 12 : 1
“புனல்ஆடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
 வேழ மூதூர் ஊரன்”
-ஐங். 15 : 2-3
“பரியுடை நன்மான் பொங்குஉளை அன்ன
 அடைகரை வேழம்வெண்பூ”
-ஐங். 13 : 1-2

வேழத்தின் பூவும், கரும்பின் பூவைப் போல மணமற்றது. ஆதலின், இதனைச் சூடுவாரிலர். ஆயினும், பரத்தையர் தமக்கு இசைவாரை அறிய வேண்டி இதனைப் பயன்படுத்தினர். நள்ளிரவில் இப்பூவை விற்பது போல, இதனைக் கையிற் கொண்டு திரிவர். எதிர்ப்படும் ஆடவரிடம் இதனை விலை கூறுவது போலக் கொடுத்துப் பார்ப்பர். அவர் ஏற்றால், தமக்கு இசைந்ததாகக் கொள்வர். இதனை ஒரம்போகியார் பாடுகின்றார்.

“அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
 தண்துறை ஊரன் பெண்டிர் (பரத்தையர்)
 துஞ்சுஊர் யாமத்தும் துயில் அறியலரே”

(பகரும்-கொள்வார் குறித்துக் கொடுக்கும்) -ஐங். 13 : 1-4