பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/774

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வரகு
பாஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்
(Paspalum scrobiculatum, Linn.)

“கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
 சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையோடு
 இந்நான் கல்லது உணவும் இல்லை”
-புறநா. 335 : 4-6


என்று கூறுகின்றார் புலவர் மாங்குடி கிழார். வரகு ஓர் ஆண்டுச் செடி; வரகு அரிசிக்காகப் பயிரிடப்படுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : வரகு
தாவரப் பெயர் : பாஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்
(Paspalum scrobiculatum, Linn.)

வரகு இலக்கியம்

சங்க இலக்கியத்தில் வரகு மிகுதியாகக் கூறப்படுகிறது. கபிலர் வரகு விளைவிப்பதைச் சிறப்பாகப் பாடுகின்றார்.

“கார்ப் பெயற்கலித்த பெரும்பாட்டு ஈரத்து
 பூழி மயங்கப் பலஉழுது, வித்தி
 பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
 களைகால் கழாலின் தோடு ஒலிபுகந்தி
 மென்மயில் புளிற்றுப் பெடை கடுப்ப நீடி
 கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து
 கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
 வாலிதின் விளைந்த புதுவரகு அரிய”

(பூழி-புழுதி; பீள்-சூல்) -புறநா. 120 : 2-9


கார்காலத்து மழைக்குப் பின் வரகு விதைப்பர் என்றும், வரகின் அடித்தண்டைக் ‘கருங்கால் வரகு’ என்றும், வரகின்