பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சங்க இலக்கியம்

காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்பதற்கு விளக்கம் தரவரும் இளம்பூரணர், கடவுள் மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கமும், மானிடப் பெண்டிர் நயந்த பக்கமும் என்றவாறு எனக் குறிக்கின்றார்.

அது கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும், கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவும் ஆம்’ என்பது நச்சினார்க்கினியர் உரை.

காமப்பகுதி கடவுள் மாட்டும் ஏனையோர் மாட்டும் மட்டுமன்றிக் குழவிப் பருவத்தும், ஊரின்கண் காமப்பகுதி நிகழ்த்தலும் உரித்து என்பதை,

குழவி மருங்கினும் கிழவ தாகும் ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான

என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் வழித் தெளிவாக்குகின்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

கொற்ற வள்ளையும் ஒரிடத் தான

என்பதனால் புகழ்தல் கருத்தாயின் கொற்றவள்ளையும் பாடாண்பாட்டாம் என்பது பெறப்படுகிறது.

அடுத்து அமரர்கண் முடியும் அறுவகையான் வரும் பாடாண் பாட்டில் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வரும்போது கடவுள் வாழ்த்தொடு வரும் என அதன் மரபு உணர்த்து கின்றார்.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

என்பது தொல்காப்பிய நூற்பா.