பக்கம்:சங்க கால மகளிர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


அச்சம், நாணம், மடன் முதலிய பண்புகள் பெண்களுக்கே உரிய பெரும் பண்புகளாகப் போற்றப்பட்டன. மகளிர்தம் மனத்திற் குறிப்பின்றித் தோன்றும் நடுக்கம், அச்சம் என்று கூறப்படும். பெண் தன்மையோடு பொருந்தாத புறச் செயல்களில் ஒழுகாது ஒதுங்கி வாழ்தலே நாணம் எனப்பட்டது. அறிந்தும் அறியாத தன்மையினராயிருத்தல் மடன் என்று கூறப்படும்.

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான[1]

என்று தொல்காப்பியனார் மேலும் பெண்மையின் பண்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.

“செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார்.

இவையெல்லாம் தொல்காப்பியம் பேசும் பெண்ணின் பெருமைகளாகும். தொல்காப்பியனார் ‘மாதர் காதல்’[2] என்றும் சொல்லதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பெண்கள் அன்பிற்குரியவர்கள்; காதலித்தம்குரியவர்கள் என்பன பெறப்படுகின்றன. பெண்களுக்கு உயிரினும் நாணம் சிறப்புடையது என்றும், நாணத்தினும் கற்புச் சிறந்தது என்றும் தொல்காப்பியனார் களவியலிற் குறிப்பிட்டுள்ளார்:

உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும்

செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று.[3]

  1. தொல்காப்பியம்: பொருளியல்: 15
  2. தொல்காப்பியம்: உரியியல் : 32
  3. தொல்காப்பியம்: களவியல்: 23