பக்கம்:சங்க கால மகளிர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


முனைக்குவரம் பாகிய வென்வேல் நெடுந்தகை[1]

என்று குறிப்பிடுகின்றது. இதனால் போர்முனைக்கென்று வாழ்ந்த ஆணின் பெருவீரம் சுட்டப்படுகின்றது. காவற் பெண்டு பாடியுள்ள புறப்பாடலொன்று கொண்டும், போர்க்களத் தொழிலில் மேம்பட்டவன் ஆண்மகன் என்பது புலனாகும்.[2]

இவ்வாறு வன்மை மிக விளங்கிய ஆணின் பண்பிற்கு முரணாக, அன்பும் அருளும் ஆகிய மென்மைப் பண்புகள் நிறைந்த பெண்களைத் தமிழ்ச் சமுதாயம் பெற விழைந்து பண்டைத் தமிழ்மக்கள் அன்பும் அடக்கமும் அறிவும் பண்பும் நிறைந்த பெண்மக்களைப் பெற விரும்பினார்கள் என்பது,

பொய்யா நாவிற் கபிலன்[3]

என்றும்,

புலனழுக்கற்ற அந்தணாளன்[4]

என்றும் தாம் வாழ்ந்த காலத்துப் புலவர் பெருமக்களா லேயே ஒருசேரப் புகழ்ந்து பேசப்பெற்ற கபிலர்தம் ஐங்குறு நூற்றுப் பாடலொன்றால் அறியலாம்;

குன்றக் குறவன் கடவுட் பேணி

இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்.[5]

  1. புறநானூறு: 31.4.2
  2. ‘தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே’ – புறநானூறு: 86 ; 5-6
  3. புறநானூறு: 174 : 10
  4. புறநானூறு: 129
  5. ஐங்குறுநூறு: 257 : 1-2