பக்கம்:சங்க கால மகளிர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

னியம் ஆகிய யாப்பிலக்கண நூல்கள் இரண்டனை எழுதிய காக்கை பாடினியார் என்ற பெண்பாற் புலவர்தம் இயற்றமிழ்ப் புலமை பெரிதும் பாராட்டத்தக்கது. பெண்பாற் புலவர்களின் பாடல் நயமும், பொருள் நலமும் அக்கால மகளிர்தம் இயற்றமிழ்ப் புலமையினை இனிது எடுத்துரைப்பவையாகும்.

இசைப்புலமைத் திறம்

இயல்பிலேயே மென்மைத் தன்மை வாய்ந்த மகளிர் இசைக்கலையில் சிறந்து விளங்கினர். அவர்கள் குரல் இனிமை நிறைந்ததாக இருந்தது. தாலாட்டுப் பாட்டுப் பாடியே வழிவழி இசையை வளர்த்த மரபினர் மகளிர் அல்லரோ? யானை முதலிய காட்டு விலங்குகளும் கூட அவர்தம் இசைக்குக் கட்டுப்பட்டன.

ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையிலும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும்.[1]

“குறமகள் ஒருத்தி, குறிஞ்சிப் பண்ணைத் திறத்துடன் பாட, தினைக்கதிரை யுண்ணவந்த ஒரு யானை அதனை உண்ணாமலும், அவ்விடத்தை விட்டுப் புடை பெயராமலும், அப்பண்ணால் நெஞ்சம் ஈர்க்கப்பட்டு மனமுருகி நின்று கொண்டே உறங்கிவிட்டது” என்ற குறிப்பு மகளிர் தம் இசைத்திறனுக்கு ஒரு சான்றாகும்.

கொடிய பாலைநிலத்து மறவர்களும் பாலைப்பண்னை மகளிர், யாழில் வாசித்த அளவில், தம் கொலைக்கருவி கையினின்றும் நழுவிக் கீழேவிழ, அவ்விசையால் ஈர்க்கப்


  1. அகநானுாறு: 102: 5-9.