பக்கம்:சங்க கால மகளிர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

வது செய்ததன் கண் முடிய நில்லாது தப்பியொழுகுதல், கரணத்தொடு முடிந்த காலையின் அவையிரண்டும் நிகழுமாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று. [1]

இனி, மகளிர்தம் கற்புக் காலப் பண்புகளையும் பணிகளையும் விரிவாகக் காண்போம்.

கற்பு:

‘கற்பு’ என்ற சொல்லிற்குக் கணவன் கற்பித்த வழியில் ‘மனைவி நிற்றல்’ என்றும், ‘கற்போன்ற திண்மை நெஞ்சு உடையளாயிருத்தல்’ என்றும் பொருள் விரிப்பர். “உயிரினும் நாணம் சிறந்தது; அந்நாணத்திலும் கற்புச் சிறந்தது” என்றும் தொல்காப்பியனார் குறிப்பிடுவர்.[2]

“இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?” என்று வினவுகின்றார் திருவள்ளுவர்:

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.[3]

எனவேதான், இளங்கோவடிகள் கண்ணகியின் பெருமையினைக் கவுந்தியடிகள் வாயிலாகச் சிறப்பித்துப் பேசும் பொழுது,

இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக்கடம் பூண்ட இத்தெய்வ மல்லது

பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்.[4]

  1. தொல்காப்பியம்: இளம்பூரணர் உரை.
  2. தொல்காப்பியம்: களவியல்: 22.
  3. திருக்குறள்: 54
  4. சிலப்பதிகாரம்: அடைக்கலக்காதை . 142-144