பக்கம்:சங்க கால மகளிர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

என்று கண்ணகியின் கற்புத் திறலினைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். மேலும் கணவர்க்கு இனிய துணையாக விளங்கும் மகளிர்க்கு இன்றியமையாது வேண்டப்படுவது கற்பு என்னும் சீரிய பண்பே என்பதனையும் மறவாது குறிப்பிட்டுள்ளார்.

காமம்:

அடுத்து, காமம். அஃதாவது தலைவன்மாட்டு அன்பு நிறைந்த நெஞ்சினளாயிருத்தலாகும். “நீரில்லாமல் இவ் வுலகம் இயங்க முடியாது போலக் காமமில்லாவிட்டால் நாம் இயங்க முடியாது என்பதனை நன்கு அறிந்தனர் நம் தலைவர்” என்று கூறும் தலைவியின் கூற்றால் தலைவன் மாட்டுத் தலைவி கொண்ட அன்பின் திறம் வெளிப்படும்.

நீரின் றமையா வுலகம் போலத்

தம்மின் றமையா தங்கயங் தருளி.[1]

இதுபோன்ற திருவள்ளுவர் காட்டும் காதலன் “இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகளைப் போன்றன” என்று குறிப்பிடுகின்றார்.

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடங்தையொடு எம்மிடை நட்பு.[2]

மேலும், ஆடவர்க்கு அவரவர்கள் மேற்கொண்ட வினையே – கடமையே உயிராக இருக்க, மகளிர்க்குத் தத்தம் கணவரே உயிராக விளங்குகின்றனர் என்று சங்க காலப் புலவரும் அரசரும் ஆகிய பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னும் சேர நாட்டுச் செம்மல் பாட்டிசைத்துள்ளார்:


  1. நற்றிணை: 1: 6.7.
  2. திருக்குறள்: 1122.