பக்கம்:சங்க கால மகளிர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ

மானுண் டெஞ்சிய கலுழி நீரே.[1]

பொறையுடைமை:

பொறையுடைமை எனப்படுவது மென்மையான மனத்துடன் பொறுத்துப் போகும் பண்பாகும்.

திருவள்ளுவர், “தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.[2]

“பொறையுடைமை” (forbearance) என்றே ஓர் அதிகாரத்தை வகுத்துப் பொறுமைப் பண்பை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினை மனித சமுதாயத்திற்கு வற்புறுத்துகின்றார். ஆண்களினும் மகளிரிடத்துப் பொறுமைப் பண்பு மிகுதியாக இலங்கக் காணலாம்.

தாய் குழந்தையைக் கோல்கொண்டு அடிக்கும் நேரத்திலும், அக்குழந்தை ‘அம்மா அம்மா’ என்றே அழும். அக் குழந்தை போலத் தலைவன் இனியவற்றைச் செய்தாலும், இன்னாமைதரும் கொடிய செயல்களைத் தலைவி மாட்டுச் செய்யினும், தலைவியின் துன்பத்தை நீக்குதற்கு வல்லவன் தலைவன் ஒருவனே யாதலின் அருள் நோக்கிலேயே எப்பொழுதும் பாடு கிடப்பாள் தலைவி என்பதனை நெய்தல் திணைப் பாடல்களைப் பாடவல்ல அம்மூவன் குறிப்பிட்டுள்ளார்.


  1. ஐங்குறு நூறு: 203.
  2. திருக்குறள் : 151.

ச.ம.-3