பக்கம்:சங்க கால மகளிர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றுவந்த செவிலித்தாய் நற்றாயினிடத்தில் பின்வரு மாறு குறிப்பிடுகின்றாள்: "முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவையாமல் உடுத்துக்கொண்டு, குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில், தாளிப் பினது புகை மணப்ப, தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பைத் தன் தலைவன் இனிதென்று கூறி உண்பதனால், தலைவியின் முகமானது நுண்ணி தாக மகிழ்ந்தது" என்று குறிப்பிடுகின்றாள்.

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.[1]


இதனால் தலைவி, கணவன் உவக்கச் சமையலைத் திறம் படச் செய்து பரிமாறி அவன் மகிழ்ச்சியுடன் உண்ணக் கண்டு தானும் மகிழ்ந்தாள் என்பது பெறப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞரான பாரதிதாசனும் தாம் இயற்றிய 'குடும்ப விளக்கில்' இதுபோன்ற காட்சியினை வடித்திருப்பது நினைக்கத்தக்கது.

உண்டனன்: உண்ணக் கண்ட
நகைமுத்தோ உவப்பை உண்டாள்.[2]


  1. 106. குறுந்தொகை: 1 67.
  2. 107. குடும்ப விளக்கு: மூன்றாம் பகுதி.