பக்கம்:சங்க கால மகளிர்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

தொன்னெடுங் காலந் தொட்டு இடையறாது தொடர்ந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் இலக்கியம் இறைவன், இயற்கை, பெண்மை ஆகிய மூன்றனைச் சிறப்பித்து நிற்பதின்ைக் காணலாம். தொல்காப்பியம் இம்மூன்றினுக்கும் தனிச் சிறப்பிடம் தந்து போற்றுவதனைக் கானும் போது இம் மூன்றன் பழமையும் சிறப்பும் புலனாகும். 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியினரான தமிழர் வாழ்வில் காலம் கடந்து வாழும் இவ்வுலகியற்றியானுக்கு முதலிடம் தந்து போற்றியிருப்பதனைக் காண்போம் முல்லையில் மாயோனாகவும், குறிஞ்சியிற் கோலக் குமரனாகவும், மருதத்தில் இந்திரனாகவும், நெய்தலில் வருணனாகவும், பாலையிற் கொற்றவையாகவும் தெய்வம் நிலைபெற்றதாகத் தமிழின் முந்துநூலாம் தொல்காப்பியம் கூறும்.

இறைவனையே இயற்கைச் சூழலிற் கண்ட நாடு தமிழ் நாடு. அழகு உறையும் இடங்களிலெல்லாம் ஆண்டவன் கொலுவீற்றிருக்கிறான் என்று கண்டார்கள். இயற்கை மனிதனுக்கு வாழ்வும் வளமும் வழங்கியது. இன்பமும் அமைதியும் தந்து நின்றது. இயற்கையின் இனிய பெற்றி யில் ஈடுபட்ட உள்ளம் மாறா மகிழ்ச்சியில் திளைத்தது: ஆழ்ந்த அமைதியில் துலங்கியது.

தமிழர் தம் வாழ்வின் தொடக்க காலந் தொடங்கியே பெண்மையைப் போற்றிச் சிறப்பித்தார்கள். இறைவனையே உமையொரு பாகனாகத் தமிழர் கண்டனர். 'உண்ணாமுலை உமையாளொடு உடனாகிய ஒருவன்’ அண்ணாமலை அண்ணல் என்று கொண்டு அவ்வண்ணாமலையைத் தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே என்று அறுதியிட்டு ரைத்தனர். "காதல் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்' என்று திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்ட ஆளுடைய அரசு அகங் குளிரப் பாடுகின்றார். பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருக்கின்ற காரணத்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்றார் சிவம்பெருக்கும் திருஞான சம்பந்தர்.

மனிதன் வாழ்க்கையிற் பெறத்தக்க பேறுகளில் தலையாய பேறு நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறுவதாகும். வாழ்க்கையில் எல்லாச்செல்வங்களும்வாய்த்திருந்து இல்லாள் என்ற செல்வம் மட்டும் இயைபாகப் பொருந்தியிருக்க வில்லையென்றால் அதனால் ஒரு பயனும் இல்லை. ஆனால் எச்செல்வத்தினையும் பெறாத ஒருவன் நல்ல மனைவி என்னும் செல்வத்தினை மட்டும் குறைவறப் பெற்று விடுவானேயானால் அவன் வாழ்க்கை வெற்றியடைந்து விடும்.