பக்கம்:சங்க கால மகளிர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


தலைவன் தலைவி, காதலன் காதலி, கிழவன் கிழத்தி என்ற சொற்கள் தமிழில் வழங்குவதைக் காண்க. “அன்பு வாழ்க்கையில் விளங்கிய ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவி என்று குறிப்பிட்டதோடு தலைவன் தலைவி என்று இருவர்க்கும் சரிநிகரான தலைமை கொடுத்துப் பாராட்டியுள்ளனர். இருவரும் ஒரு நிகரான உரிமையுடையவர் என்பது பற்றியே அவர்களைக் கிழவன் (உரிமையுடையவன்), கிழத்தி (உரிமையுடையவள்) என்றும் குறிப்பிட்டுள்ளனர். உரிமை (கிழமை) என்பதற்கு உண்மையான அடையாளம் அன்பின் சிறப்பே என்பதைக் கண்டவர்கள் தமிழ்நாட்டு முன்னோர்கள்” ஆவர்.[1]

மேலும், “மேற்கு நாடுகளில் பெண்கள் திருமணமானவுடனே தங்கள் பிறப்புரிமையையே இழந்து விடுகிறார்கள். பிறப்புரிமையைக் காட்டுவது பெற்றோர் வைத்து வழங்கிய பெயர் அல்லவா? அந்தப் பிறப்புரிமையை இழந்து தங்கள் பெயரை மாற்றி வழங்க உடன்படுகிறார்கள் மேற்கு நாட்டுப் பெண்கள். அந்த அடிமை வழக்கம் இந்த நாட்டில் இல்லை”[2] திருமணம் ஆவதற்கு முன்னிருந்த பெயரே திருமணத்திற்குப் பின்னரும் தொடர்கிறது.

அடுத்து மேற்கூறிய களவியல் நூற்பாவின் இறுதி அடி,

‘மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே’

என்பதாகும். மேற்கூறப்பட்ட பத்து வகை ஒப்புகளும் தலைவன் தலைவியருக்கிடையே அமைந்திருக்க வேண்டும். ஒன்றிரண்டு பண்புகளில் தலைவன் கூடுதலாக இருந்தாலும்


  1. டாக்டர் மு. வரதராசனார்: பெண்மை வாழ்க: 26
  2. டாக்டர் மு. வரதராசனார்: பெண்மை வாழ்க: 25.