பக்கம்:சங்க கால மகளிர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மகளிர் ஒரு சொத்தாகக் (property) கருதப்பட்டமையினை அறியலாம். இற்றைநாட் சமுதாயம் ஆண்மகனுக்குப் பெண்ணைப் பெற்ற பெற்றோரிடமிருந்து விலையினைச் சீதனப் பொருள் (dowry) என்ற பெயரில் கேட்கும் கொடுமையினை நாம் நன்கு அறிவோம்.

பெண் ஒரு வீட்டிற்குத் திருமணம் முடித்து அடியெடுத்து வைத்தாள் என்றவுடன், ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு உண்ணும் உணவையுடைய செல்வச் சிறப்பில்லாத இல்வாழ்க்கை இனிய விழாவையுடைய மகிழ்ச்சி பொங்கும் வீடாயிற்று என்று அவள் இல்லற வாழ்க்கையினைக் காணும் சிலர் கூறும் அளவிற்கு நன்னிலையடைந்தது என்பதனைக் காண்கிறோம்.[1]

இக்காலத்திலும், “ஏர் பிடித்தவன் என்ன செய்வான்; பானை பிடித்தவள் பாக்கியம்” என்ற பழமொழி இதே கருத்தில் வழங்கக் காணலாம்.

இவ்வாறு மிகச் சிறந்த பரிசப் பொருளைத் தந்தாலும், தன் மகளுக்கு ஏற்ற கணவனாக அவன் அமையாவிடில் அவனுக்குத் தன் பெண்ணைத் திருமணத்தில் தர உடன்படுவதில்லை என்பதை அறிகிறோம்.[2]

திருமணத்திற்கு வேண்டிய பொருள் தேடித் தலைவன் பொருள் தேடச் செல்வதுண்டு. இதனை ‘வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்’ என்பர். திருமணத்தில் ஓர் இளைஞன் ஒரு பெண்ணின் கை பற்றுதல் ‘கொடை,


  1. 188. குறுந்தொகை: 295: 4-6
  2. 189. புறநானூறு: 343: 10-13