பக்கம்:சங்க கால மகளிர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


“சங்க காலத்தில் பெண்ணிற்கு மட்டுமே கற்பு வேண்டப்பட்டது; ஆணிற்கு வேண்டப்படவில்லை” என்று சிலர் கூறக்கேட்கலாம். அவர்கள் சோழன் நலங்கிள்ளியின் புறநானூற்றுப் பாடலைக் கேட்காதவராவர்.

சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் உரைக்கின்றார். “என்னைப் பணிந்து வேண்டுவாரானால் என் அரசு மட்டுமின்றி என் உயிரையே கேட்பினும் தருவேன். ஆனால் என் உள்ளத்தை அறிவில்லாது இகழ்ந்தவன், தூங்கும் புலியை இடறிய குருடனைப் போல உயிர் பிழைத்துப் போதல் அரிதாகும். யானையின் காலடியிலே பட்ட மூங்கில் முளையைப் போல, என்னை எதிர்க்கும் பகைவரை அவர் ஊர் வரை சென்று ஒழிப்பேன். ஒழியேனாயின், காதலற்ற பொது மகளிர் தழுவ, என் மாலை துவள்வதாக!”[1] (என் தேவியும் என்னை ஒதுக்குவாளாக என்பது இவண் கருத்தாகும்.)

அரசனாக விளங்கிய சோழன் நலங்கிள்ளியே இவ்வாறு அண்கற்புப் பற்றி எண்ணியிருப்பானேயாகில் எளிய ஆண் மகனின் எண்ணம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.

அடுத்து, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் வஞ்சினத்தைக் காண்போம்:

“சிங்கம் போலச் சீறிவரும் அடங்காத மனமுடைய பகை ரை அவர் தோற்றோட வென்று நிற்பேன். அவ்வாறு வெல்லேனாயின், என் சிறந்த மனைவியான இவளைப் பிரிவேனாக”[2] என்று குறிப்பிடுகின்றான்.


  1. புறநானூறு: 73. 13-14
  2. புறநானூறு; 71; 1-6.