பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரந்தவர்கட்கு ஈயேன் என்பது,” என்று கடிந்தும் பாடினார். மேலும், அனுபவ முதிர்ந்து அறிவு சான்ற கழைதின் யானையார், தம்மை வந்து யாசித்தவர்கட்குக் கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்ததாகக் கருதினார். அதனினும் உயர்ந்ததாகப் பிறர் கொடுக்கையில் கொள்ளேன் என்பதையும் உடன் கூறி நம்மை உவகைக் கடலில் திளைக்கவும் செய்கிறார். வேண்டாமை என்பது விழுச் செல்வம் தானே! இதற்கு ஒப்பாவது இம்பரும் இல்லை உம்பரும் இல்லை. இந்த நால்வகைக் கருத்துக்களையே வற்புறுத்த வேண்டிய புலவர் பெருமான் ஓரியை நோக்கி “ஈயென இரத்தல் இழிந்தன்று! அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந் தன்று” எனப் பாடி இவனைப் பரவசமுறச் செய்தனர்.

மேலும் வல்வில் ஓரி சுருங்கிய செல்வமுடையனாயினும், அச்செல்வத்தினைப் பலர்க்கும் ஈந்து, பார் அறியும் புகழ் உடையவன். ஒருசில மக்கள் பெருஞ்செல்வமுடையராயினும் எவர்க்கும் உதவாத பான்மையராய் வாழ்பவர் என்பதையும் நல்ல உவமை கூறி விளக்கி வைத்தார் புலவர் பெருந்தகையார். பெருஞ் செல்வனை எல்லையற்ற நீரையுடைய உவர்க்கடலுக்கு உவமையாக்கினர். ஆதன் ஓரியை அக்கடல் அருகு அமைந்த சிறு ஊற்று நீருக்கு உவமைப்படுத்தினர். கடல் பரப்புடையதாயினும், அதன் நீரைப் பருகுதற்கு எவரும் செல்லார். அது போலப் பெருஞ்செல்வம் உடையானொருவன்,