பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சங்க கால வள்ளல்கள்

தோற்றுவாய்

திருவள்ளுவரையும் அவர் யாத்த திருக்குறள் பெரு நூலையும் எல்லா மொழியினரும், இனத்தவரும் சமயத்தவரும் பெரிதும் பாராட்டுதற்குரிய காரணங்கள் பலவற்றுள் ஒன்று, எல்லாச் செய்திகளையும் திருவள்ளுவர் நன்கு சிந்தித்து வரையறுத்துத் தம் நூலில் பாடி அமைத்திருத்தலே யாகும். அங்ஙனம் அமைத்த கருத்துக்களில் “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்பதும் ஒன்று. அஃதாவது உயிர் அடையவேண்டிய பேறாக இருப்பது தமக்மென வாழாது பிறர்க்கென வாழ்ந்து, இயல்வது கரவாது ஏற்றவர்க்கு இல்லையெனக் கூறாது ஈந்து, அங்கனம் ஈந்ததனால் இசைதோன்ற வாழ்வு நடாத்துதலே யாகும் என்பதாம். ஈதலையே தம் வாழ்வாகக் கருதி அவ்வாழ்வே தம் மறுமையிலும் தொடரவேண்டும் என்று விரும்புபவர்களும் பலர் நம் நாட்டில் இருந்திருக்கின்றனர். கன்னனது ஆவியோ நிலையில் கலங்கி இருந்தது. அவ்வாவி ஆக்கையின் அகத்ததோ, புறத்ததோ என்னும் நிலையில் இருந்தது. அந்நிலையிலும் அவன் கண்ணனுக்கு வேண்டியதை ஈந்து கன் இசையை நிலை நிறுத்தினான் என்பதைக் கேள்விப்படுகிறோம் அல்லவா? அப்படி ஈந்த அவனை நோக்கிய கண்ணன் “கன்னா நீ வேண்டிய வரங்களைக் கேள் ; யான் தருகின்றேன்” என்று வினவியபோது, அங்கர்பூபதி வேறு எதையும்