பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1. பாரி
பாரியின் பொது இயல்பு

பாரி என்பவன் பறம்பு நாட்டிற்குத் தலைவன். அப்பறம்பு, மலையும் மலையைச் சார்ந்த முந்நூறு ஊர்களையு முடையது. இவன் பறம்பு மலைக்கும் பறம்பு நாட்டிற்குந் தலைவனாக இருந்தாலும், பேர் அரசர் என்னும் பெயரைப் பெறுதற்குரியன் அல்லன். இவன் குறுநில மன்னன் என்றே குறிப்பிடத்தக்கவன். இவன், குறுநில மன்னனேயானாலும் பெரு நில மன்னர்க்குரிய தகுதிகள் பலவும் அமையப்பெற்றவன். இவன் வீரமும் ஈரமும் ஒருங்கே அமைந்து விளங்கியவன். இவன் வீரத்திலும் இவன் மாட்டு அமைந்த ஈரமே இசையால் திசைபோயதாய்க் காணப்பட்டது. இவனைக் கபிலர் இகழ்வது போலப் புகழும் முறையில் ஓர் அழகிய பாட்டையும் பாடி, இவனது கொடைத் திறத்தைச் சிறப்பித்துள்ளனர். அப்பாட்டின் திரண்ட பொருள், “உலகில் பொது மக்களும், புலவர் பெருமக்களும் பாரி பாரி என்று இவனையே கொடைக்கு எடுத்துக்காட்டாகப் புகழ்ந்து பேசுகின்றனர். இவ்வுலகை வறுமையால் நலியாவண்ணம் காப்பவன் பாரி ஒருவனே அல்லன், மாரியும் உண்டு,” என்பதாம். உலகைக் காப்பதற்கு மாரியும் பாரியுமன்றி வேறல்லர் என்பதாம். இதன் நுண்பொருளைச் சிந்திக்கவும். இது வரம்புகடந்த புகழ்ச்சியேயானாலும், பாரி கொடைத்திறத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தான் என்பதில் ஐயமின்று. இவன் இங்ஙனம் கொடையில் சிறந்து காணப்பட்டமை