பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

செல்லுங்காலத்துச் செல்லாறுதோறும் முன்னர் ஒளவையார்க்கு உணவுகொடுத்து உளமகிழ்ந்து செல்வன். போர்க்களத்தில் வேல் நுழையும் இடங்களில் தான் முன்னர் நிற்பன். ஒளவையாரிடத்தில் வைத்த அன்பின் காரணமாக அவ்வம்மையார் தலை, எண்ணெய் காணாது நீவுதல் உறாது, புலால் நாற்றம் வீசும் தன்மையுடையதாகக் காணப்பட்டாலும், அதனைத் தன் தூய, இனிய, மணம் நிறைந்த கையால் தடவிக்கொடுப்பன். இவையெல்லாம் போயினவே,” என்று வருந்தினர். “அதிகமான் நெடுமான் அஞ்சியின் மார்பகத்தில் தைத்த அம்பு, இவன் மார்பகம் மட்டும் ஊடுருவிச் சென்றிலது. இரப்பவர் கையைத் துளைத்தது. இரவலர் கண்களில் நீர் உகச் செய்தது. புலவர் செந்நாவிலும் தைத்து அவர்களைப் பாடாதவாறு செய்தது,” என்று ஏங்கி இரங்கினர். ஐயோ “அதிகமான் எங்கு, இருக்கின்றனனே ? என அரற்றினர். “அதிகமான் இறந்தான். இனிப் பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஈவாரும் இல்லை. உலகில் பலர் செல்வம் படைத்தும் உயிருடன் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பகன்றை மலர் மலர்ந்தும், அதனைச் சூடுவார் அற்றுக்கிடப்பது போன்றது. அஃதாவது அவர்கள் எழை எளியர்கட்கு உதவாமையால் புலவர்களால் பாடும் பேறு பெறாதவர் ஆவர்,” எனப் பாடி வருந்தினர்.

எவ்வளவு வருந்தி யாது பயன்! இறந்தவன் இறந்தவனே. விட்டுவிடப் போகு துயிர். விட்ட உடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்