பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கூறிவிட்டனர். பேகனுக்கு எம்முறையில் கூறினால், அவன் திருத்தமுறுவான் என்று சிந்தித்தனர். அதன்பொருட்டு இவன் செய்த கொடையைக் கூறி விளித்தனர். “மெல்லிய தகைமையினை யுடைய கரிய மயில், குளிரால் நடுங்குமென அருள் கூர்ந்து படாம் கொடுத்த பேகனே!” என்று விளித்தனர். இங்ஙனம் சுட்டியதன் நோக்கம், ஓர் அஃறிணைப் பொருளின் துயரங் கண்டு ஆற்ற ஒண்ணாத அருங்குணம் படைத்த நீ, ஓர் உயர்திணைப் பொருள், அதிலும் நின்வாழ்க்கைக்கு அரும்பெருந் துணையாக அமைந்த ஒருத்தி நின்னைக் காணாது, கூடி மகிழாது அலமந்து ஆழ்துயரில் உள்ளாள் என்பதைச் சிறிதும் உணராது, இருத்தல் முறையாமோ? என்பதை உணருமாறு செய்தற்கே இங்ஙனம் விளித்தனர். "நீ நின் இல்லக்கிழத்திக்கு இரக்கங்காட்டிலை எனில், நின் இசைக்கு வசையே வரும். ஆகவே, நின் இசையினை இழக்காமல் இருக்க விழைந்தால், அவட்கு அருள்பண்ணுக” என்பதற்காகவே இவனுக்கு இவன் பெற்ற இசையினை நினைவுபடுத்த “நல் இசைக் கடாஅ யானைக் கலிமான் பேக!” எனவும் விளித்தனர். விளித்து யாது கூறினர் ? “பேக! யான் பசித்து வந்திலன். எனக்கும் என்னை எதிர்நோக்கி வாழும் சுற்றமும் இல்லை. ஆகவே, நீ எற்கு இது போது பரிசில் தருக என நின்னை வினவவும் மாட்டேன். என்றாலும் ஒன்றைமட்டும் நின்னை இதுபோது கேட்க அவாவி வந்தனன். அது தான், நீ இன்றைப் பொழுதே ஆழி இவர்ந்து, நின் அருமனை புகுந்து, ஆயிழை கண்ணகியின் அருந்துயர் களைவதேயாகும் " என்று வேண்டி இரந்து நின்றார்.