பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சடுகுடு ஆட்டம்


போட்டி ஆட்டத்தில் கலந்து கொள்வதற்கேற்ற உடல் தகுதியினைப் பெற்றிருக்கின்றார்களா என்பதைக் கண்டறிந்து, தகுதி பெற்ற மருத்துவர்கள் ‘விளையாடலாம்’ என்று அனுமதி அளித்த உடனே ஆட வைப்பதுதான் சாலச் சிறந்த முறையாகும். அபாயம் யாருக்கும் நிகழாமல் தடுத்திட தகுந்த வழியுமாகும்.

2. கடுமையான போட்டிகள் நிலவும் உயர் போட்டிகளுக்குத்தான் மருத்துவர்கள் சோதனையும், அவர்களின் அனுமதியும் பெற வேண்டும். சாதாரணமாக பயிற்சி காலங்களில் விளையாடுவதற்கு வருடாந்திரம் நடக்கும் ஒரு மருத்துவ பரிசோதனையே போதும்.

பொதுவாக, ஒருவர் உடல் திறன் (Physical Fitness) நிறைந்தவராக இருக்க வேண்டும் என்பதே ஆட்டத்திற்கு அடிப்படைத் தேவை என்பதால், பலவீனமான தேகம் உள்ளவர்கள் இவ்வாட்டத்தில் பங்கு பெறக்கூடாது என்பதே நோக்கமாகும். பல ஹீனமானவர்கள் பத்திரமான ஆட்டத்திற்கு உரியவர்கள் அல்லர். அவர்களால் எப்பொழுதும் அபாயமே என்பதைக் கருதியே, முன்கூட்டியே சோதனை செய்து முன்னெச்சரிக்கையாக ஆட்டத்தை நடத்திட முயல்வது சடுகுடு நடத்துபவர்களின் சாமர்த்தியமாகும்.

3. துரிதமான இயக்கங்களையும், வேகமான அசைவுகளையும் உடையதாக சடுகுடு ஆட்டம் விளங்குவதால், எடுத்த எடுப்பிலேயே, நினைத்த மாத்திரத்திலேயே சடுகுடு ஆட்டத்தில் குதித்துத் தாவி, குனிந்து அடங்கி விளையாடிட முடியாது. விறைப்பாக இருக்கின்ற உடல் உறுப்புக்களைச் சூடேற்றி, பின்னர் பதமாக்கி (Warm up), இதமாக அவைகள் இயங்கிடும் வண்ணம் நெகிழும் நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.