பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சடுகுடு ஆட்டம்


ஆற்றின் பெயர்கள் பலவாறாக இருந்தாலும், நீரின் தன்மை ஒன்றே என்பது போல, ஆட்டத்தின் பெயர்கள் பலவாக விளங்கினாலும், ஆட்டத்தின் அடிப்படைத் தன்மை ஒன்றாக இருந்ததால்தான், வரலாற்றுக்கு முற்பட்ட தோற்றம் பெற்றிருந்தாலும், ஒரு சிறிதும் மங்காது மறையாது, மக்களுடன் மக்களாக வழக்குடன் வழக்காக தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது; வருகிறது.

இயற்கையின் எழில்மிகு தோற்றம் போல, மக்கள் மனதிலும் செயலிலும் பரிணமித்து, பிரபலமாக பயன்பட்டுக் கொண்டே வந்தது; வருகிறது.

தோற்றமும் யூகமும்

பெயர் பெற்ற ஆட்டமான சடுகுடு (கபாடி) எப்படி தோன்றியது என்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டால், இது ஒரு மிகப் பழங்கால ஆட்டம், வரலாற்றுக்கு முற்பட்ட ஆட்டம் என்றே கூறலாம். நதி மூலம், ரிஷி மூலம் காண முடியாதது போல, சடுகுடு ஆட்டத்தின் தோற்றத்தையும் காண முடியாது என்று பலர் கூறுவதையும், வரலாற்றுச் சான்றுகள் அல்லது குறிப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தால், ‘திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி இளைத்தேன்’ என்பது போலத்தான் முயற்சியும் அமைந்துவிட்டிருக்கிறது.

வரலாறு எழுதும் பழக்கமில்லாத இந்தியர்களின் இயல்பினால், எத்தனையோ பல சுவையான, முக்கியமான கலைகள் மறைந்து அழிந்தது போலவே, விளையாட்டுக் கலையும் வீறுபெற்று விளங்க முடியாமற் போய்விட்டது. ‘இப்படித்தான் உருவானது’ என்று உரைத்திட முடியாமல், ‘இப்படித்தான்