பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

17


கொற்றவை என்பவள் காளி. துடி என்பது மேளத்தைக் குறிப்பது. அந்தத் துடி வகையில் சிறிய மேளம் போன்றவற்றைக் குறிக்க சடுகுடுக்கை, குடுகுடுப்பை என்னும் பெயர்கள் உண்டு.

காளிக்குப் பலியிடும்பொழுது, சடுகுடுக்கை அல்லது குடுகுடுப்பை என்ற பறை ஒலி எழுப்பி வருவது பண்டைய தமிழர் மரபு என்பதாகவும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

பண்டைய வீரர்கள் ஏன் காளிக்கு பலி கொடுத்தார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

பண்டைத் தமிழ் அரசர்களின் போர் முறையே பேரதிசயம் நிறைந்தவை. நீதிக்குப் புறம்போகாத நெஞ்சழுத்தம் நிறைந்தவர்கள். ஆகவே, அவர்களின் அறநெறிப் போர் முறைகளில் போரை நேரடியாகத் தொடங்குமுன், எதிரி அரசனின் ஆடுமாடுகள் அடங்கிய நிரைகளைக் கவர்ந்துவரச் சொல்வது வழக்கம்.

இவ்வாறு எதிரி அரசனின் நிரைகளைக் கவர்ந்து வருவதை வெட்சி என்பார்கள். கவர்ந்து சென்ற நிரைகளை மீட்டுக் கொண்டு வருவதை கரந்தை என்பார்கள்.

நிறைகளைக் கவர வரும்போது அல்லது நிரைகளை மீட்கப் போகும்பொழுது நிச்சயம் போர் நிகழத்தான் செய்யும். அவ்வாறு நிகழ்கின்ற போரில், தங்களுக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என்று காளிதேவிக்குப் பலிகொடுப்பார்கள் வீரர்கள். அந்த முறையே பலி சடுகுடு என்று மாறி, மருவி வந்திருக்கலாம் என்று அபிப்பிராயப்படுகின்றார்கள் வல்லுநர்கள்.