பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

எளிய ஆட்டம் போல் சடுகுடு தோற்றமளித்தாலும், எத்தனை எத்தனை நுண்திறன்களை இந்த ஆட்டம், விஞ்ஞான பூர்வமான வளர்ச்சியுடன் நிறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்நூலைப் படிக்கும் பொழுது நீங்கள் உணர்வீர்கள்.

முரட்டுத்தனமான ஆட்டம், முட்டாள்தனமான ஆட்டம், வெறித்தனமான விளையாட்டுக்காரர்கள் என்ற வார்த்தைகளால் சாடுகின்றவர்களும் வாய் பிளந்து ஆட்டத்தின் மென்மையை, தன்மையை, பார்த்து அதிசயிக்கின்ற அளவில் மெருகேறி இருக்கின்றது. தரம் கூடி விளங்குகிறது.

எந்தக் காலத்தில் தோன்றியது என்ற வரலாற்றுக் குறிப்புக்கு எட்டாத பெருமையை உடைய சடுகுடு ஆட்டத்தின் வரலாற்றுக் குறிப்புடன் நூலைத் தொடங்கியிருக்கிறேன்.

பத்திரமான முறையிலும், பாதுகாப்பு பெறுகின்ற வகையிலும் ஆட்டம் விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், பாடி வருபவர் பின்பற்றக்கூடிய தந்திர முறைகளை மிகவும் சாதுர்யமாக விளக்கியிருக்கிறேன்.

பாடி வருபவரைப் பிடிப்பவர்கள் எப்படியெல்லாம் பிடித்திட வேண்டும், அபாயமில்லாமல் ஆடிட வேண்டும் என்பதற்காக, விளக்கும் படங்களுடன் கோடிட்டுக் காட்டி யிருக்கிறேன்.

அத்துடன், உடலைப் பலப்படுத்தவும், பதப்படுத்தவும் போன்ற பயிற்சி முறைகளையும் ஒரு பகுதியாக இணைத்துத் தந்துள்ளேன்.

சடுகுடு ஆட்டம் பற்றி முதன்முதலாக வருகின்ற தமிழ் நூலாக உங்கள் கையில் படைத்திருக்கிறேன். விடுபட்டுப்போன கருத்துக்களை அல்லது இன்னும் விவரமாக எழுதியிருக்கலாம் என்று நீங்கள் உணர்கின்ற பகுதிகளை சுட்டிக் காட்டினால், அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிட உதவியாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சடுகுடு_ஆட்டம்.pdf/6&oldid=1040512" இலிருந்து மீள்விக்கப்பட்டது