பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 ம.பொ.சிவஞானம் முன்மொழிந்த தீர்மானத்திற்கு முன்னுரை கூறுகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இந்த அவையில் முன் மொழிவதாகக் குறிப்பிட்டார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன். நானும் என் வாழ்நாளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பேச்சினை இந்தத் தீர்மானத்தின் மீது பேசுவதன் மூலம் பெருமை அடைகிறேன். இது. திராவிட முன்னேற்றக் கழக அரசும், முதல்வர் கலைஞர் அவர்களும், அவருடைய சக அமைச்சர்களும் எனக்குத் தேடித் தந்துள்ள நற்பேறு என்பதை உணர்ந்து, அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன். முதல்வர் அவர்கள் முன்னுரை ஆற்றுகையில் கூட, 'இந்த மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வெற்றி தேட இடைவிடாமல் தொடர்ந்து தமிழரசுக் கழகம் முயற்சி எடுத்து வந்திருக்கிறது" என்பதனை, மிகுந்த பண்பாட்டுடன் குறிப்பிட்டு, இதற்காகப் பாடுபட்டவர்களுடைய உள்ளங்களில் மகிழ்ச்சியினைத் தேக்கி வைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த மாநில சுயாட்சி முயற்சியிலே எனக்கும் தமிழரசுக் கழகத்திற்கும் சரித்திர பூர்வமான. உணர்ச்சி பூர்வமான தொடர்புண்டு. இதை, திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதல்வரவர்கள் ஏற்றுக்கொண்டு, இரு கழகங்களும் இணைந்து செயல்படக்கூடிய ஒரு உணர்ச்சியை, சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள் என்பதை நான் நன்றி உணர்வோடு காண்கிறேன். மாநில சுயாட்சி பற்றி ஆய்வு நடத்த ஒரு குழு அமைக்கப்படவிருக்கிறது என்ற எண்ணத்தை 1969 ஆம் ஆண்டு ஜூன் 26ம் நாளில் நடந்த என்னுடைய பிறந்தநாள் விழாக்கூட்டத்தில் பேசுகிற போதுதான் முதல்வரவர்கள் முதல் முதலில் வெளியிட்டார்கள்.