98 | நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற் கெடலருஞ் செல்வத் திடையள நாட்டுத் தீதில் கொள்கை மூதூ ருள்ளும் ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் செம்மை சான்ற தேவன் தொன்மை சான்ற நன்மை யோனே. என்னும் பாடலால் அறியப்படுகிறது. அன்றியும், இப்பாடலின் கீழ் ஓர் உரைநடைப் பகுதியும் உளது. அஃது 'இத் தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினான் இடையளநாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்' என்பது. இவற்றால் நெடுந்தொகை நானூறுக்குக் கருத்து அகவலாற் பாடியவர் சோழமண்டலத்தில் இடையளநாட்டிலேயுள்ள மணக்குடியென்ற ஊரில் வாழ்ந்தவர் என்பதும், இவரது இயற்பெயர் பால்வண்ணதேவன் என்பதும், அரசனால் அளிக்கப்பெற்ற வில்லவதரையன் என்ற பட்டமுடையவர் இப்புலவர் என்பதும் நன்கு வெளியாகின்றன. இவர், அகநானூற்றிலுள்ள ஒவ்வொரு பாடலின் கருத்தையும் தெள்ளிதின் விளக்கிச் சிறந்த அகவல் நடையில் கூறியிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அகநானூற்றுப் பாடல்களின் கருத்தை விளக்கினமை ஒன்றே இவ்வாசிரியர் புலத்துறை முற்றிய புலவர் பெருமான் என்பதை இனிது புலப்படுத்துகின்றது. இத்தகைய தமிழ்ப் பேராசிரியர் அரிதின் எழுதித் தமிழகத்திற்கு உதவிய அந்நூல் இந்நாளில் கிடைக்காமற்போனமை பெரிதும் வருந்தத்தக்கது. இனி, இவ்வாசிரியர் பிறந்து வாழ்ந்துவந்த ஊர் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாகும். சோழமண்டலத்தில் மணக்குடி என்ற பெயருடன் இந்நாளில் பல ஊர்கள் உள்ளன. அவற்றுள் நம் புலவர் பிரானது ஊர் யாது என்பதைத் துருவிப் பார்த்தல் வேண்டும். 'நின்ற நீதி' என்று தொடங்கும் பாயிரப் பாடலால் அவ்வூர் இடையள நாட்டில் உள்ளது என்பது பெறப்படுகின்றது. சோழமண்டலத்தில் முற்காலத்தில் பல உள்நாடுகள் இருந்தன என்பது பண்டைத் தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது. அவற்றுள், இடையளநாடு என்னும் பெயருடைய நாடு ஒன்றும் இருந்தது என்பது தஞ்சை இராசராசேச்சுரத்திலுள்ள* கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. - தஞ்சாவூர்க் கோட்டத்திலுள்ள திருத்தருபூண்டிக் கூற்றத்திலேதான் இவ்விடையள நாடு இருந்தது என்பதும்
- (S.1.1. Vol. II, Nos.17,18 and 70)