பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



போர்ப்பூவுந் தார்ப்பூவும் முறையே ஆத்தியும் முல்லையுமாம்; கொடி "புலிக்கொடியாம். பண்டைக்காலத்து இவர்களது தலைமை நகரங்கள் உறையூரும் காவிரிப்பூம்பட்டினமுமாயிருந்தன; பின்னர், தஞ்சையும் கங்கைகொண்ட சோழபுரமும், காஞ்சியும் தலைமை நகரங்களாயின. - இக்குடியிற்றோன்றிச் சோணாட்டையாட்சி புரிந்த மன்னர் பலராவர். இவர்களது சரிதங்கள் முழுதுந் தொடர்ச்சியாய்த் தற்காலத்து அறிந்து மகிழ்தற்கிடமில்லாமற் போயின. ஆயினும், திருவுடையரேயன்றித் தெள்ளியருமாய்த் தோன்றி வீரமும், புகழும் என்றும் நின்றுநிலவப் பல அரும்பெருஞ்செயல்களைச் செய்து முடித்து இந்நிலவுலகத்தை விட்டகன்ற பெருந்தகையாளர் பலர் சரிதங்கள், பழைய தமிழ்ப் புலவர்களியற்றியுள்ள செய்யுட்களினாலும் சிலாதாம்பிரசாசனங் களினாலும் அறியப்படுகின்றன. கடைச்சங்ககாலத்திற்குப் பின்னர் விளங்கிய சோழமன்னர்களின் சரிதங்களை, நன்காராய்ந்து, தொடர்ச்சியாக, ஸ்ரீமான் T.A. கோபிநாதராயர் M.A., அவர்களும் ப்ரோபஸர் S.கிருஷ்ணஸாமி ஐயங்கார் M.A. அவர்களும் முறையே தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அரும்பெரும் முயற்சிகொண்டு சோழசரித்திர அமுதை நம் தமிழகத்திற்கும் புறநாடுகட்குமூட்டிக்களிப்பித்த இவ்விருபுலவர்கட்கும் நம்மவர் பெரிதும் நன்றியறிதற் கடப்பாடுடையராவர். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் விளங்கிய சோழமன்னர்களுள், 'வாயிற்கடை மணி நடுநாநடுங்க - வானின் கடைமணியுகு நீர்நெஞ்சுசுடத் தான்றன் அரும்பெறற் புதல்வனை யாழியின்மடித்த 'மனுநீதிகொண்ட சோழனும், 'புறவு நிறைபுக்குப் பொன்லுலகமேத்தக் - குறைவிலுடம்பரிந்த' கொற்றவனாஞ் சிபியும், ஓங்குயர் மலயத்தருந்த வனுரைப்பத் - தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியனும், 'அமரமுனிவ னகத்தியனருளாற் - காவிரிகொணர்ந்த காந்தமன்' னவனும், 'வாதராசனைவலிந்து பணி கொண்'டோனும், தாங்கள் பாரதமுடிப்பளவு நின்று தருமன்றன்கடற் படைதனக்குதவி செய் 'தோனுமாய சிலரது பெயர்கள் மாத்திரங் கேட்கப்படுகின்றன. இனி, கடைச்சங்ககாலத்தில் விளங்கிய சோழமன்னர் பலராவர். அவர்களுள், புறநானூறு முதலிய தொகை நூல்களால் அறியப்படும் சிலரை இங்குக் குறிக்கின்றேன். 1. முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, 2. வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, 3. உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னி, 4. கரிகாலன், 5. நலங்கிள்ளி, 6. நெடுங்கிள்ளி, 7. மாவளத்தான், 8. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், 9. குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருவளவன், 10. இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,. 11. கோப்பெருஞ்சோழன், 12. சோழன் செங்கணான்.