பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 126 விட்ட செய்தியை உணர்த்துகின்றது. எனவே, இது, கி.பி. 1455-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததொன்றாம். இக்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள சாளுவத் திருமலைராயன் என்பவனே காளமேகப்புலவரால் 'கல்யாணிச்சாளுவத் திருமலைராயன் - மந்தரப்பயனாங் கோப்பையனுதவு மகிபதி விதரணராமன்' என்று புகழ்ந்து பாடல் பெற்ற பெருமை வாய்ந்தவன் என்பது நன்கு துணியப்படும். சாளுவமன்னனாகிய இத்திருமலைராயன் - என்பான் விசய நகர வேந்தர்களது பிரதிநிதியாகவிருந்து சோழ மண்டலத்தை ஆட்சிபுரிந்தவன் என்பது ஆராய்ச்சியால் புலப்படுகின்றது. இவன் காலத்தில் விசய நகரத்தில் வீற்றிருந்து அரசாண்ட மன்னர்கள் மல்லிகார்ச்சுனராயர் விருபாக்ஷராயர் என்போர். இவர்களது பிரதிநிதியாகவிருந்து தமிழ் நாட்டை ஆட்சிபுரிந்து சாளுவத் திருமலைராயன் கி.பி. 1455-ஆம் ஆண்டில் நிலவிய செய்தி மேலே குறித்துள்ள தஞ்சைக் கல்வெட்டால் நன்கு அறியப்படுகின்றது. ஆகவே, இம்மன்னனால் ஆதரிக்கப்பெற்ற நம் காளமேகப் புலவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவராதல் வேண்டும். இங்ஙனம் கல்வெட்டுக்களின் துணைகொண்டு உறுதி செய்யக்கூடிய பிற புலவர்களது காலங் களையும் ஆராய்ந்து அமயம் நேர்ந்துழி நம் தமிழ்ப் பொழிலில் வெளியிடுவேன்.