127 27. வேம்பையர்கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி வேம்பையர்கோன் நாராயணன் என்பார் மதுரைமாநகருக்கு வடகிழக்கே இரண்டுகாத தூரத்தில் வையையாற்றின் வடகரையிலுள்ள வேம்பற்றூரில் முற்காலத்தில் நிலவிய புலவர் பெருமக்களுள் ஒருவர் ஆவர். இவ்வேம்பற்றூரை இக்காலத்தில் வேம்பத்தூர் என்று வழங்குகின்றனர். இதனை நிம்பை என்றுங் கூறுவதுண்டு. புறநானூற்றிலுள்ள 317 ஆம் பாடலை இயற்றியவராகிய வேம்பற்றூர்க் குமரனார் என்பவரும் இவ்வூரினரே யாவர். எனவே, கடைச்சங்க காலத்தில் இவ்வூர் சிறந்த செந்தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்துவந்த இடமாக இருந்தது என்பது அறியத்தக்கது. அதற்குப் பின்னரும் பல அரிய தமிழ்நூற்களைப் பாடிய புலவர்கள் இவ்வூரில் இருந்துள்ளனர். பாகவத புராணத்தை இனிய செந்தமிழ்ப்பாக்களாக இயற்றியுள்ள செவ்வைச்சூடுவாரும், தமிழ்மொழியில் ஞானவாசிட்டம்பாடிய ஆளவந்தான் மாதவபட்டரும், ஆநந்த லகரி சௌந்தரிய லகரி முதலான தமிழ் நூற்களை அருளிய விரைக்கவிராச பண்டிதரும், பாடுதுறை முதலான நூற்களுக்கு ஆசிரியராகிய தத்துவராயரும், பகவத் கீதையைத் தமிழ்மொழியில் பாடியுள்ள ஸ்ரீபட்டரும், வரதுங்கராம பாண்டியரது ஆசிரியராகிய ஈசான முனிவரும். இவ்வேம்பத்தூரில் முற்காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமான்களே யாவர். அந்நாளில் இவ்வூரில் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து வாழ்ந்துவந்த புலவர் கூட்டத்தை வேம்பத்தூர் சங்கத்தார் என்று வழங்கி வந்தனர் என்பது நன்கு அறியப்படுகின்றது. புலவர் பெருமக்கள் பலர்க்குப் பிறந்தகமாகவுள்ள இப்பழம்பதியில் மணியன் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவரே சிராமலை அந்தாதிபாடிய நாராயணன் என்னுங் கவிஞர். இவர் பாடியுள்ள சிராமலை அந்தாதி நூற்றிரண்டு கட்டளைக் கலித்துறைகளையுடையது. சொற்சுவையும் பொருட் சுவையும் ஒருங்கே அமையப் பெற்றது; அகப்பொருள்துறைகள் அமைந்த பல இனிய பாடல்களையுடையது; பக்திச்சுவையொழுகும் தன்மையது. இத்துணைச் சிறப்புவாய்ந்த இவ்வந்தாதியைச் சிராமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது இயற்றியருளிய கவிஞர் கோமானாகிய நாராயணன் என்பார் ஒப்பற்ற சிவபக்தியுடைய வராயிருந்திருத்தல் வேண்டுமென்பது திண்ணம். இவர் இவ்வந்தாதி யிலுள்ள பாடல்கள் எல்லாவற்றையும் திருச்சிராப்பள்ளியிலுள்ள மலையில் பொறித்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். அவற்றைக் கல்வெட்டு இலாகாவிலுள்ள. அறிஞர்கள் படி எடுத்துத் தென்னிந்தியக் கல்வெட்டுப் புத்தகம் நான்காம் தொகுதியில் வெளியிட்டிருக்கின்ற னர்.(South Indian Inscriptions Vol. IV No. 167.) அவற்றுள், சில பாடல்களில் சீர்களும் சிலவற்றில் சில எழுத்துக்களும் உதிர்ந்து