பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



137 பெரியார் இருவரும் பத்தி நெறியைத் தமிழிசை மூலமாக நாட்டில் பரப்பி வந்தமை உணரற்பாலது. கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் சுந்தரமூர்த்திகளும் பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை மன்னன், சடகோபர் ஆகிய திருமாலடியார்களும் அருட்பாக்கள் பாடித் தமிழிசையையும் பத்தி நெறியையும் வளர்த்து வந்தனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதல் ஆதித்த சோழ்னால் நம் தமிழகத்தில் சோழர் பேரரசு நிறுவப் பெற்றது. சோழமன்னர்களின் ஆட்சியும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் சற்றேறக்குறைய 400 ஆண்டுகளுக்கு மேல் இனிது நடைபெற்றது. அவர்கள் தம் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டிலுள்ள சிவன் கோயில்களிலும் திருமால் கோட்டங்களிலும் சமய குரவர்களின் பாடல்களைத் தமிழ்ப் பண்களில் நாள்தோறும் பாடி வருதற்கு நிவந்தங்கள் வழங்கியுள்ளனர். அச் செய்திகளைக் கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் அறியலாம். தஞ்சைப் பெரிய கோயிலில் திருப்பதிகம் பாடுவதற்கு முதல் இராசராச சோழன் (கி.பி. 985 - 1014), நாற்பத்தென்மரை அமர்த்தி யிருந்தானென்று அங்குள்ள கல் வெட்டொன்று கூறுகின்றது. முதல் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070-1120) ஓர் இசைத்தமிழ் நூல் இயற்றி யிருந்தமை கலிங்கத்துப் பரணியால் அறியப்படுகின்றது. அப்பெரு வேந்தனுடைய மனைவி ஏழிசை வல்லபி என்பாள் அவ்விசை நூலை நன்கு கற்று இசையிற் சிறந்த புலமை பெற்றுத் தமிழிசையை வளர்த்து வந்தாள் என்று தெரிகிறது. அது பற்றியே அவ்வரசி ஏழிசை வல்லபி என்ற சிறப்புப் பெயருடன் வழங்கப்பெற்றனள். அதனால் அக்கோப்பெருந்தேவியின் இயற் பெயர் கூடமறைந்துவிட்டது எனலாம். கோயில்களில் திருப்பதிகம் பாடும் தேவரடியார்களுக்கும் தளியிலார்க்கும் தமிழ்ப்பண்களைக் கற்பித்தற் பொருட்டுச் சோழ மன்னர்கள் பாணர்களை நியமித்திருந்தனர் என்று திருவிடைமருதூரி லுள்ளகல்வெட்டொன்று கூறுகின்றது. அதன் பொருட்டுப் பாணர்களுக்கு அவ்வேந்தர்கள் அளித்திருந்த இறையிலி நிலம் பாணப்பேறு என அந்நாளில் வழங்கப்பெற்றது என்பது அக்கல்வெட்டால் அறியப் படுகின்றது. ஆகவே, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழிசை ஈடும் எடுப்புமற்ற நிலையில் சிறப்புற்று மக்கட்கு இன்பப் பேற்றிற்கு ஏதுவாயிருந்தது என்பது நன்கு தெளியப்படும். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்த சாரங்க தேவர் என்பார் வடமொழியில் இயற்றியுற்ற சங்கீத ரத்நாகரம் என்ற நூலில் சோழ மன்னர்களின் காலத்தில் வழங்கிய தேவாரப் பண்களைக் S.I.I.Vol II. No;65. Ibid, Vol.V No.705. 5.