147 32. இரு பெரும் புலவர்கள் நம் தமிழ்நாட்டில் அரசு வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தமிழ் வேந்தர்களின் ஆட்சி கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீழ்ச்சியுற்றமை அறிஞர் பலரும் அறிந்ததேயாம். அதன் பின்னர் நம் தமிழகம், பிறமொழியாளர்களாகிய ஏதிலாரது ஆட்சிக்குள்ளாகி எல்லையற்ற துன்பங்களை நாளும் அனுபவித்து வந்தமையோடு தன் பெருமை குன்றித் தாழ்ந்த நிலையையும் எய்தியது. அன்னியர் ஆட்சி நடைபெற்ற காலங்களில் நம் தாய்மொழியாகிய தமிழ் அரசாங்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அக்காலங்களில் அவ்வயலாருடைய மொழிகளே அரசியல் மொழிகளாக அமைந்து பெருமையுற்றன. எனவே, தமிழ்மொழி ஆதரவற்ற நிலையை அடைந்தது. அதனைப் போற்றுவாரும், கற்பாரும், கற்பிப்பாரும் மிகக்குறைந்து போயினர். அக்கொடிய காலங்களில் ஊர்தோறும் இளம்பிள்ளைகளுக்கு எழுத்தறிவித்துக் கல்விகற்பித்து வந்தவர்கள் பாலாசிரியன்மாரே எனலாம். அவர்களுள் ஒரு பகுதியினர் வீரசைவப் பெருமக்கள் ஆவர். அவர்கள் தமிழ்ப்புலமையும் கடவுட் கொள்கையும் சீலமும் உடையவர்களாகத் திகழ்ந்தமையால், பேரூர்களிலும் சிற்றூர்களிலும் செல்வர்களாலும் பொது மக்களாலும் பெரிதும் மதிக்கப்பெற்று வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் - தமிழ்மொழியோடு மக்களது வாழ்க்கைக்கு இன்றியமையாத கணக்கு முதலியவற்றையும் இளஞ்சிறார்க்குக் கற்பித்து வந்தனர். ஆகவே, இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு அடிகோலியவர்கள் அவ்வாசிரியர்களே என்று கூறலாம். உவாத்திமைத் தொழிலில் நல்ல ஊதியம் பெறுவதற்கு வாய்ப்பில்லாத அக்காலத்தில் பாலாசிரியர்கள், தாம் பெற்றதுகொண்டு அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தமையோடு தமிழ்த்தொண்டினை இயன்றவரையில் புரிந்தும் வந்தனர். - அவ்வாசிரியர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு இரண்டுவகைப்படும். ஒன்று, தம்பால் கல்வி பயின்ற சிறுவர்களுள் ஆர்வமும் நுண்மதியும் உடையவர்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஊதியம் விரும்பாமல் இலவசமாகக் கற்பித்து இவ்விளைஞர்களைப் புலவர்களாகச் செய்தமை ஆகும். மற்றொன்று, தாம் வாழ்ந்து கொண்டிருந்த ஊர்களிலும் சார்ந்துள்ள பிற ஊர்களிலும் திருக்கோயில் கொண்டுள்ள இறைவன்மீது மாலை, அந்தாதி, கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், கோவை முதலான நூல்களும், தல புராணங் களும்பாடி அரங்கேற்றி யாண்டும் தமிழ்மணம் கமழுமாறு செய்தமையாம். பாலாசிரியன்மார்களாகிய அப்புலவர் பெருமக்கள்