- - 150 விட்டது என்று மகிழ்ந்தனர். பிறகு குறித்த நாளில் புதல்வர்களுக்கு அப்பெயர்களே இடப்பட்டன. ஆண்டு நிறைவு விழாவும் இனிது நிறைவேறியது. முருகக் கடவுளுக்கு மயிலேறும் பெருமாள், ஆறுமுகப் பெருமாள், பன்னிருகைப்பெருமாள், சரவணப்பெருமாள், விசாகப் பெருமாள் முதலான பெயர்கள் உண்டு. எனவே, புலவர் பெருமானாகிய கந்தப்பையர் தம் வீரசைவக் கொள்கை தவறாமல் மனைவிமாரின் உ.ளம் உவக்குமாறு நடந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதோர் அரிய நிகழ்ச்சியாகும். | பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில். சென்னை மாநகரில் தமிழ்த் தொண்டாற்றிக்கொண்டு புகழுடன் விளங்கிய விசாகப் பெருமாளையர், சரவணப்பெருமாளையர் என்ற புலவர் பெருமக்கள் இருவரும் இவர்களே என்பது ஈண்டு அறியத்தக்கதாகும். இவர்களுள் விசாகப்பெருமாளையர் என்பார் இலக்கணப் பயிற்சி மிக்கவர்; இயற்றமிழாசிரியர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர்; சென்னையிலிருந்த அரசியலார் கலாசாலையில் தமிழாசிரியராகத் திகழ்ந்தவர்; பஞ்ச இலக்கண வினாவிடை, பாலபோத இலக்கணம் என்ற இலக்கண நூல்களை இயற்றியவர்; வடமொழியிலுள்ள 'சந்திராலோகம்' என்னும் அணியிலக் கணத்தைத் தமிழில் உரைநடையில் மொழிபெயர்த்து உதாரணச் செய்யுட்களையும் அமைத்தவர்; பல தமிழ் நூல்களைத் தம் மாணவர்கட்குப் பாடஞ்சொல்லியமையோடு அச்சிட்டும் வெளியிட்டவர். சரவணப்பெருமாளையர் என்பார் சிறந்த தமிழ்ப் புலமை படைத்தவர்; பிரபுலிங்கலீலை, திருவள்ளுவமாலை முதலான பல நூல்களுக்கு உரை எழுதியவர்; 1838-ஆம் ஆண்டில் முதன்முதல் திருக்குறளை உரையுடன் அச்சிட்டு வெளியிட்ட பெருமையுடையவர். தமிழ்நாட்டில் ஆங்காங்குக் கிடைத்த தனிப்பாடல்கள் பலவற்றையும் தேடித்தொகுத்து ஆசிரியர் பெயர்களுடன் 'தனிப்பாடற்றிரட்டு' என்ற நூலை முதலில் வெளியிட்ட தில்லையம் பூர்ச் சந்திரசேகர கவிராசபண்டிதரும், சென்னை யம்பதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் புகழுடன் நிலவிய தமிழாசிரியர் மழவை மகாலிங்கையரும் இவ்விரு புலவர் பெருமான் களின் மாணவர்களே என்பது உணரற்பால தொன்றாம்.